மாயன் - விமர்சனம்
30 Nov 2024
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில், ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைப்பில், வினோத் மோகன், பிந்து மாதவி, ஜான் விஜய், சாய் தீனா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் வினோத் மோகன் அமைதியான குணம் கொண்டவர். தனக்கு என்ன அவமானம் நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அமைதியாகவே இருந்துவிடுவார். ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். அவரது மெயிலுக்கு இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப் போகிறது என மெயில் ஒன்று வருகிறது. வினோத்தை மாயன்களின் மகன் என அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை யாரிடம சொல்லக் கூடாது என்றும் இருக்கிறது. முதலில் அதை நம்ப மறுத்தவர், பின் ஏற்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் முழுவதுமே வினோத் மோகனைச் சுற்றியே நகர்கிறது. ஒரு பக்கம் அப்பாவியான ஐ.டி. வேலை பார்ப்பவராகவும், இன்னொரு பக்கம் சாமியார் வேடத்தில் ஆவேசம் கொண்டவராகவும் நடித்துள்ளார். முடிந்த அளவிற்கு நடிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது நடிப்பை விடவும் பின்னணிக் குரல்தான் அதிகம் நடித்துள்ளது.
படத்தின் கதாநாயகி பிந்து மாதவி சில காட்சிகளில் வந்து போகிறார். போலீஸ் அதிகாரியான ஜான் விஜய், வினோத்தை மிரட்டி வேலை வாங்குபவராக நடித்துள்ளார். லோக்கல் ரவுடிகளாக அண்ணன் தம்பிகளாக சாய் தீனா, ராஜசிம்மன், அவர்களது தங்கையாக ரஞ்சனா நாச்சியார் நடித்திருக்கிறார்கள்.
ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி ஆங்காங்கே அதிரடியாக அமைந்துள்ளது. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. அவற்றை இன்னும் தரமானதாக அமைத்திருக்கலாம்.
ஒரு பேன்டஸி கதை. 13 நாட்களில் உலகம் அழிவு, லெமூரியா கண்டம், மாயன் காலண்டர், என என்னென்னவோ சேர்த்திருக்கிறார்கள். அதை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகக் காட்டுவதை இன்னும் தெளிவாகக் காட்டியிருக்கலாம்.
Tags: mayan