பழைய வண்ணாரப்பேட்டை - விமர்சனம்
04 Dec 2016
தமிழ்த் திரையுலகத்தில் நல்ல கதையம்சம் உள்ள பல படங்கள் சமயங்களில் கண்டு கொள்ளப்படாமலே போய்விடுகின்றன.
அப்படிப்பட்ட படங்களில் பெரிய ஹீரோக்கள் நடித்திருந்தால் அவை மிகப் பெரும் கவனத்தை ஈர்க்கும்.
சிறிய நடிகர்கள் நடிக்கும் படங்களையும், சிறிய பட்ஜெட் படங்களையும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து ரசிக்கும் போதுதான் அந்தப் படங்களுக்காக உழைப்பவர்களுக்கும் பலன் போய்ச் சேரும்.
அப்படி வெளிவந்துள்ள ஒரு படம்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’.
மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின், ரிச்சர்ட், அஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.
பிரஜின் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்கள் இஞ்சினியரிங் படிப்பை முடித்த அன்று குடித்து கொண்டாடிவிட்டு, பிரஜின் ரூமிலேயே இரவு தங்கியிருக்கிறார்கள். அப்போது அந்தப் பகுதியில் அரசியல்வாதி ஒருவர் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக காவல் துறை அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது.
குற்றவாளியை 21 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் வழக்கம் எங்களது காவல் நிலையத்திற்கு உண்டு என பெருமைப்படும் இன்ஸ்பெக்டர், பிரஜினின் நண்பர் ஒருவர்தான் குற்றவாளி என பொய்யாகச் சொல்லி வழக்கை முடித்து வைக்க நினைக்கிறார். அந்த ஒருவரைத் தவிர மற்றவர்களை விடுவிக்கிறார்.
அது உதவி கமிஷனரான ரிச்சர்ட்டுக்கு தெரிய வருகிறது. பிரஜின் மற்றும் நண்பர்கள் ரிச்சர்ட்டிடம் இன்ஸ்பெக்டர் பற்றி புகார் அளிக்கிறார்கள். ரிச்சர்ட் அந்த வழக்கை தானே விசாரிப்பதாக உறுதியளிக்கிறார். ஒரு பக்கம் அவர் உண்மைக் குற்றவாளி யார் எனத் தேட ஆரம்பிக்க, மற்றொரு பக்கம் நண்பனைக் காப்பாற்ற பிரஜினும் தேட ஆரம்பிக்கிறார். அவர்களில் யார் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.
வட சென்னையை மையப்படுத்தி வந்திருக்கும் கதை. அந்தப் பகுதிக்கேற்றபடியான யதார்த்தத்துடன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
படத்தில் தனிப்பட்ட ஹீரோயிசமாக இல்லாமல், உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் தேடலையே மையப்படுத்தியிருக்கிறார்கள். அதில் பிரஜினும், ரிச்சர்ட்டும் இறங்குகிறார்கள். அதை இன்னும் பரபரப்பாக, விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கலாம்.
பிரஜின், ரிச்சர்ட் இருவருமே தங்களது கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் நாயகி ஆஷ்மிதா சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். பிரஜினுக்கு உதவி செய்யும் நிஷாந்தும் கவனம் ஈர்க்கிறார்.
ஜுபின் இசையில் அனைத்துப் பாடல்களுமே சென்னை மணம் வீசும் பாடல்களாக அமைந்துள்ளது.
வழக்கமான மசாலாப் படங்களிலிருந்து வேறு மாதிரியான படங்களை விரும்பும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.