மாவீரன் கிட்டு - விமர்சனம்

04 Dec 2016
தமிழ் சினிமாவில் சாதிக் கொடுமைகளைப் பற்றிப் பேசும் படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வருகிறது. அந்தப் படங்களிலும் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகச் சொன்ன படங்கள் ஒரு சிலதான். சாதியைப் பற்றி சொல்லும் போதே அதில் சாதி மாறிய காதலையும் சேர்த்துதான் சொல்வார்கள். சாதி, காதல், மோதல் ஆகியவற்றுடன்தான் அந்தப் படங்கள் இருக்கும். அதையும் மீறி சில படங்கள் மட்டுமே மனதைத் தொடும் படங்களாக உணர்வைத் தொட்டு எழுப்பும் படங்களாக இருக்கும். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘மாவீரன் கிட்டு’ அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பெறும். 1987ம் ஆண்டு நடக்கும் கதை. பழனி அருகே உள்ள புதூர் என்ற ஒரு கிராமத்தை மையப்படுத்திய கதை. தீண்டாமை தலை விரித்தாடும் அந்த கிராமத்தில் இரு சாதி மக்களுக்கிடையே நடக்கும் போராட்டங்கள், தீண்டாமையை ஒழிக்கப் போராடும் பார்த்திபன், அவருக்குப் பக்கபலமாக இருக்கம் விஷ்ணு விஷால், மற்றும் சிலர் என நகரும் கதை. பல அழுத்தமான அரசியல் விஷயங்களையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. ஊர் பெரிய மனிதர் நாகிநீடு, சாதி வெறி பிடித்த மனிதர். அவருடைய மகன் ஹரிஷ் உத்தமன் அந்த ஊரின் இன்ஸ்பெக்டர். அவர்களை எதிர்த்து அடிக்கடி போராடும் பார்த்திபன். இவரைச் சார்ந்தவர்கள் மீது பல பொய் வழக்குகளை அடிக்கடி ஹரிஷ் உத்தமன் போடுவதும் அவர்களை பார்த்திபன் மீட்டு கொண்டு வருவதும் வழக்கம். மாமநிலத்தில் முதல் மாணவனாய் வரும் விஷ்ணு விஷாலை கலெக்டராக வேண்டும் என்கிறார் பார்த்திபன். விஷ்ணுவும் கல்லூரியில் நல்ல மாணவராக இருக்கிறார். ஆனால், விஷ்ணுவை கலெக்டராக விடக் கூடாது என அவர் மீது பொய் வழக்கு போடுகிறார் ஹரிஷ். அதிலிருந்து மீண்டு வரும் விஷ்ணு, வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஹரிஷிடம் மாட்டிக் கொள்கிறார். லாக்கப்பில் அவரைச் சித்திரவதை செய்கிறார் ஹரிஷ். மறுநாள், விஷ்ணு விஷால் காணாமல் போகிறார். ஹரிஷ் அவரை விட்டுவிட்டேன் என்கிறார். ஆனால், விஷ்ணு எங்கே போனார் என்றே தெரியவில்லை. இதனால், தன் மக்களைத் திரட்டிக் கொண்டு பெரும் போராட்டம் நடத்த ஆரம்பிக்கிறார் பார்த்திபன். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விஷ்ணு விஷால், பார்த்திபன் இருவருமே படத்தின் நாயகர்களாகவே தெரிகிறார்கள். சில காட்சிகளில் பார்த்திபன் கதாபாத்திரம் மீது அதிக முக்கியத்தும் தெரிகிறது. அவர்தான் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார். விஷ்ணு விஷால் கூட பார்த்திபனுக்குத்தான் பக்கபலமாக இருக்கிறார். இருந்தாலும் கிளைமாக்சில் விஷ்ணுதான் ஹீரோக மாறிவிடுகிறார். கிளைமாக்சை ஏன் இப்படி வைத்தார்கள் என நிச்சயம் விவாதம் எழும். இயக்குனரின் மனதில் என்ன இருந்தது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். படம் முழுவதும் வெள்ளை வேட்டி, கருப்புச் சட்டையுடன் மட்டுமே காணப்படும் பார்த்திபன் கதாபாத்திரம் அவ்வளவு இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அந்தக் கதாபாத்திரத்தை மீறி அவர் நடிக்கவில்லை. அவரைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கான ரசிகர்கள் இன்னும் அதிகமாவார்கள். 87ம் ஆண்டின் கல்லூரி மாணவராக பொருத்தமாக இருக்கிறார் விஷ்ணுவிஷால். அந்த பாக்யராஜ் கண்ணாடி அவ்வளவு பொருத்தம். ஆனால், தலையில் மட்டும் என் பொருந்தாத அந்த ‘விக்’ இயக்குனர் அவர்களே. பலருடைய விக்குகளும் அப்படியே இருக்கின்றன. அவர்களை தலை முடியை வளர்க்கவிட்டு இன்னும் யதாரத்தமாக கொடுத்திருக்கலாமே. கிளைமாக்சில் விஷ்ணு என்ன செய்யப் போகிறார் என்ற பதைபதைப்பு வந்துவிடுகிறது. ஸ்ரீதிவ்யா, தமிழ் சினிமாவின் சமீபத்திய ‘ஹோம்லி’ இளவரசி. இதிலும் அப்படியே. பேச்சை விட பார்வைகளால் காதலை அதிகம் பரிமாறிக் கொள்கிறார். ஹரிஷ் உத்தமனுக்கு அவருடைய பார்வையும், அந்தக் குரலும் அவருடைய இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை இன்னும் உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ஸ்ரீதிவ்யாவின் அப்பா பிளாரன்ட் பெரைரா மற்ற கதாபாத்திர நடிகர்களில் மனதில் பதிகிறார். இமானின் இசையில் வழக்கம் போல காதல் பாடல்களில் மெலடியின் மயக்கம் இந்தப் படத்திலும் உண்டு. படத்தில் நகைச்சுவை என்பது எங்கும் கிடையாது. இப்படிப்பட்ட படத்திற்கு அது தேவையுமில்லை. சூரி கூட படத்தில் இருக்கிறார், ஆனால், ஓரிரு வரிகள் மட்டுமே வசனம் பேசுகிறார். சில குறைகள் படத்தில் இருந்தாலும் இம்மாதிரியான படத்திற்கு அவற்றைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. காலம் கடந்து நிற்கும் தமிழ்த் திரைப்படங்களில் ‘மாவீரன் கிட்டு’ படத்திற்கும் தனி இடமுண்டு.

Share via:

Movies Released On March 15