அழகென்ற சொல்லுக்கு அமுதா - விமர்சனம்

05 Dec 2016
எதிர்பார்த்து ஏமாந்து போகும் படங்களை விட எதிர்பாராமல் ரசிக்க வைக்கும் படங்களை ரசிப்பதும் தனி சுகம்தான். அப்படி ஒரு படம்தான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. யார் ஹீரோ, யார் ஹீரோயின் என்று கூடத் தெரியாமல் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்களை இந்த அமுதாவும், அமுதாவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் முருகனும் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்கள். ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருக்கும் ரிஜன் சுரேஷ், படித்து முடித்து (?) விட்டு எந்த வேலைக்கும் செல்லாம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். குடும்பத்திற்கு அடங்காத குசும்புத்தனம் அதிகம் உள்ள இளைஞன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிபவருக்கு, நாயகி ஆர்ஷிதாவைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. எப்படியாவது அவரைக் காதலில் விழ வைத்துவிட வேண்டும் என்று விடாமல் அவர் பின்னாலேயே சுற்றுகிறார். ரிஜனைக் கண்டாலே பிடிக்காத ஆர்ஷிதா, அவரைப் பல முறை விரட்டி அனுப்புகிறார். போலீஸ், டான், அவரின் அப்பா என யாரிடம் சொன்னாலும் ரிஜன் சுற்றுவதை விடவில்லை. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாமென ரிஜன் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறார், அதன் பின் அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. யாருப்பா இந்த ரிஜன் சுரேஷ் ?. இத்தனை நாளா எங்கப்பா இருந்த...எனக் கேட்க வைத்துவிடுவார். நடிக்கவே தெரியாம தங்களை பவர் ஸ்டாராக சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு மத்தியில் நடிக்கவும் தெரிந்த, நகைச்சுவையும் தெரிந்த ஒரு அப்பாவி, கிறுக்குத்தனமான, பிடிவாதக்காரராக முருகன் கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார் ரிஜன். அவர் நடை என்ன, பேசுகிற விதம் என்ன ? எல்லாமே ‘தனியா’ தெரியுது. அதற்காக இயக்குனர் நாகராஜனுக்கு தனி பாராட்டுக்கள். இப்படியும் கூட ஒரு கதாபாத்திரத்தை வடிவமைக்க முடியுமா என்பதற்கான பாராட்டுதான் அது. நாயகனாகவும் வலம் வரலாம், நகைச்சுவையிலும் தெறிக்க விடலாம் இந்த ரிஜன். புதியவர்களைத் தேடும் இயக்குனர்கள் பார்வை ரிஜன் மீது விழட்டும். ஆர்ஷிதா, இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் நடித்தவர். படத்தில் மேக்கப்பே இல்லாமல் சராசரி பெண்ணாகத் தெரிகிறார். அதுதான் அவருடைய கதாபாத்திரத்தையும் தலைப்புக்கேற்றபடி இன்னும் அழகாகக் காண்பிக்கிறது. இப்படிப்பட்ட எளிமையான படங்களில் நடிக்கும் அமுதாக்கள்தான் உண்மையிலேயே ஹீரோயின்கள். இப்படி ஒரு மகனைப் பெற்ற அப்பாக்கள் என்னவெல்லாம் வசை பாடுவார்கள் என்பதை வெளிப்படையாக திட்டித் தீர்க்கிறார் பட்டிமன்றம் ராஜா. பத்து பட்டிமன்றத்தில் அவர் பேசி கைத்தட்டல் வாங்குவதை, இந்த ஒரே படத்தில் பேசி நடித்து கைத்தட்டல் வாங்கிவிடுகிறார். ரிஜனின் அம்மா ரேகா சுரேஷ், மகன் மீது பாசம் வைக்கும் வழக்கமான அம்மாவாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறார். ரஜினி மகாதேவ் இசையில் அனைத்துப் பாடல்களுமே ஆட்டம் போட வைக்கின்றன. அதிலும், தஞ்சை செல்வி பாடியுள்ள ‘வியாசர்பாடி..அண்ணன் கேடி..’ பாடல் மியூசிக் சேனல்களில் அடிக்கடி ஒளிக்கும். சில நீளமான காட்சிகளைக் கத்தரித்திருந்தால் இன்னும் சுவாரசியம் அதிகரித்திருக்கும். குறிப்பாக அந்த ‘டான்’ காமெடி. இரண்டரை மணி நேரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாய் விட்டு, வயிறு வலிக்க சிரித்து வரவேண்டும் என்று நினைப்பவர்கள், ‘அமுதா’ வைப் பார்க்க போகலாம்.  

Share via:

Movies Released On March 15