பரியேறும் பெருமாள் - விமர்சனம்
28 Sep 2018
2018ம் ஆண்டில் சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமா மீதான நம்பிக்கையை அதிகம் விதைத்துள்ளது.
அந்த விதத்தில் இந்த ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தன் முதல் படமாகக் கொடுத்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் திரையுலக ரசிகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்ப்பார்.
கதைக்களம், கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் என அனைத்திலுமே யதார்த்தம் இழையோடுகிறது. ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் மனதில் இடம் பிடிப்பதுதான் அந்தப் படத்தின் உண்மையான வெற்றி.
இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களான பரியேறும் பெருமாள், ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி ஆகிய இரண்டும் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்து பல மணி நேரமாகியும் நம் மனதில் அப்படியே உட்கார்ந்துவிடுகிறது.
கதாபாத்திரங்களுக்காகத்தான் நட்சத்திரத் தேர்வு இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது. முதன்மைக் கதாபாத்திரங்கள் முதல் ஊரில் உள்ள ஒருவர் என ஒரே காட்சியில் வருபவர் கூட எந்த சினிமாத்தனம் இல்லாமல் தேர்வு செய்து நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.
அதிலும், நாயகனின் அப்பா கதாபாத்திரம் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒன்று. அதற்காக தேர்வு செய்யப்பட்டு நடிக்க வைக்கப்பட்ட தங்கராஜ் அவருடைய நடிப்பில் மனதை கனக்கச் செய்துவிடுகிறார்.
நெல்லைச் சீமையின் புளியங்குளம் கிராமத்து இளைஞராகவே மாறிவிட்டார் கதிர். ஒரு பழைய லுங்கி, டீ சர்ட் என எளிமையான உடையுடன் அவருடைய கதாபாத்திரத்தை வலிமையாகச் செய்திருக்கிறார். உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்பு என பரியேறும் பெருமாள் கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு ஏற்றமாக அமைந்துள்ளது.
ஜோ என்கிற ஜோதிலட்சுமி ஆக ஆனந்தி. இப்படி ஒரு இயல்பான அழகுடன் ஆர்பாட்டம் இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல், அலட்டல் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகியின் கதாபாத்திரத்தைப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆனந்தமாக உள்ளது. கதிர் மீது இருப்பது என்ன என்பது குறித்து கண்ணை மூடிக் கொண்டு அவர் பேசும் காட்சியில் கண்கலங்காமல் இருக்க முடியாது.
சாதி, மதம், அந்தஸ்து பார்க்காமல் வருவதுதான் நட்பு என்பதை யோகி பாபு கதாபாத்திரம் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
சாதி வெறி பிடித்த அப்பாவாக மாரிமுத்து, அண்ணனாக லிஜிஷ், ஆணவக் கொலை செய்யும் பெரியவர் கராத்தே வெங்கடேசன், கல்லூரி முதல்வர் பூ ராம், அப்பாவாக நடிக்க வரும் சண்முகராஜன் என மற்ற கதாபாத்திரங்கள் கூட மனதில் இடம் பிடிக்கின்றன.
சந்தோஷ் நாராயணனின் இசை, ஸ்ரீதரின் ஒளிப்பதிவு இந்த பெருமாளுக்கு சங்கு, சக்கரமாக அமைந்துள்ளன.
புளியங்குளம் கிராமத்திலிருந்து திருநெல்வேலி சட்டக் கல்லூரிக்கு சட்டம் படிக்கச் செல்லும் கதிர், சாதிய ஏற்றத் தாழ்வுகளால் அவமானப்படுத்தப்படுகிறார். அவர் மீது காதல் கொள்கிறார் வேற்று சாதியைச் சேர்ந்த ஆனந்தி. இந்தக் காதல் விவகாரத்தில் கதிரைக் கொல்லத் துடிக்கிறார்கள் ஆனந்தியின் அப்பாவும், அண்ணனும். அவர்களை எதிர்த்து தன் வழியிலேயே தான் யார் என்பதைப் புரிய வைக்கிறார் கதிர். இவ்வளவு நேர்மையான ஒரு காதல் கதை தமிழ் சினிமாவில் இதுவரை வந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.
படத் தயாரிப்பாளர் இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு தயாரிப்பாளராக, இயக்குனர் மாரி செல்வராஜை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் மேலும் பல புதிய யதார்த்த படைப்புகள் வருவதற்கு வழி செய்திருக்கிறார். தயாரிப்பாளரின் நம்பிக்கையை இயக்குனர் மாரியும் காப்பாற்றியிருக்கிறார். மாரியின் எண்ணத்திற்கு படத்தில் நடித்துள்ளவர்களும் நல்ல உருவம் கொடுத்திருக்கிறார்கள்.
சாதிக் கொடுமை பற்றிய ஒரு படத்தை அந்தந்த சாதிகளின் பெயரைச் சொல்லாமலேயே படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இன்னும் பல வருடங்களுக்கு இந்த ‘பரியேறும் பெருமாள்’ ஒரு ‘மேற்கோள்’ படமாக இருக்கும் என்பது நிச்சயம்.
பரியேறும் பெருமாள் - வெற்றி உலா