96 - விமர்சனம்

02 Oct 2018
2018ம் ஆண்டில் தமிழ் சினிமா ஏதோ புண்ணியம் செய்திருக்கிறது போலிருக்கிறது. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ தந்த லெனின் பாரதி, ‘பரியேறும் பெருமாள்’ தந்த மாரி செல்வராஜ் ஆகியோருக்கு அடுத்து இதோ ‘96’ தந்த பிரேம்குமார் என அறிமுக இயக்குனர்கள் இனி வரும் காலங்களிலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்கள். வாழ்வியல் படங்கள், சமூகப் படங்கள், காதல் படங்கள் ஆகியவைதான் எப்படிப்பட்ட மாற்றத்தைத் தருகின்றன. தேவையற்ற ஹீரோவின் கொண்டாட்டம், தற்பெருமை பாடும் பாடல்கள், நகைச்சுவை என்ற பெயரில் கடி ஜோக்குகள் என பல படங்களைப் பார்த்து நொந்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகன் இந்த ‘96’ போன்ற படங்களைப் பார்த்து நெஞ்சம் நிமிர்ந்து ரசிப்பான். சிம்பிளான ஒரு வரிக் கதைதான். பள்ளி படிக்கும் காலத்தில் காதலித்த விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் அப்போதே பிரிந்து விடுகிறார்கள். 22 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்திக்கும் போது அவர்களின் சந்திப்பு எப்படி நடக்கிறது, எப்படி நகர்கிறது, எப்படி முடிகிறது என்பதுதான் இந்த ‘96‘ ?. தமிழ் சினிமாவிலும் விஜய் சேதுபதிக்கு முன் விஜய் சேதுபதிக்குப் பின் என தாராளமாகப் பிரிக்கலாம். எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்குள் அப்படியே அடங்கிப் போய்விடுகிறாரே ?.  கோடிகளில் வசூல் கொடுத்து தமிழ் சினிமாவை ஆள வேண்டும் என்று நினைக்காமல் இப்படிப்பட்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதற்காகவே அவரை தனியாகப் பாராட்டலாம்.  காதல் பிரிவையும், முன்னாள் காதலி த்ரிஷாவை சந்திக்கத் தயக்கப்பட்டு ஒளிந்து கொண்டிருப்பதையும், த்ரிஷாவை சந்தித்த பின் அவரை விட்டு கொஞ்சம் ஒதுங்கியிருக்க நினைப்பதும் என வரம்பு மீறாத, காதலை மனதில் இருத்திக் கொண்ட கே.ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார். இத்தனை வருடங்களாக இப்படிப்பட்ட நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் த்ரிஷா. முன்னணி நடிகர்களுடன் நடித்து, நடித்து உங்களது நடிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே. இப்போதாவது இம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற உங்களின் முடிவுக்கு எத்தனை பாராட்டினாலும் தகும். காதலை பேசிக் கொள்ளாமல் காட்டுவது, பேசிக் கொண்டாலும் அதை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு காட்டுவது, வெளிப்படையாகச் சொன்னாலும் அதை எல்லை மீறாமல் காட்டுவது, காதலை வெளிப்படுத்துவதில்தான் அவருக்கு எத்தனை எத்தனை வாய்ப்புகள். கொஞ்சம் நழுவினாலும் இந்தக் காதல் வேறு மாதிரியான காதலாகப் போய்விடும் சூழல். அதைப் புரிந்து கொண்டு அந்தக் காதலை எத்தனை லாவகமாகக் காட்டுகிறார் த்ரிஷா. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ பட ஜெசியை விட இந்த ‘96’ எஸ். ஜானகி தேவிக்கே நமது ஓட்டு. விஜய் சேதுபதியின் பள்ளிப் பருவ கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கர், காதலியைப் பார்த்து பயந்து நடுங்குவதும், வார்த்தை வராமல் தடுமாறுவதும், அவர் தொட்டதும் மயங்கி விழுவதும் என அந்த வயது தடுமாற்றங்களை இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளிப் பருவ த்ரிஷா கதாபாத்திரத்தில் கௌரி ஜி. கிருஷ்ணா. காதலை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் தைரியமாய் அணுகுகிறார். இவர்கள் இருவரின் நடிப்பு, படம் பார்க்கும் பலரையும் அவர்களது பள்ளிப் பருவக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். இவர்களின் தோழியாக, சிறு வயது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்ணும், தோழனாக நடித்திருப்பவர்களும் சில காட்சிகளே வந்தாலும் அவர்கள் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பள்ளியின் வாட்ச்மேனாக ஜனகராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடித்திருக்கிறார். அதற்காகவாவது இவரது கதாபாத்திரத்திற்கு ஏதோ ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கலாம். தேவதர்ஷினி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் உடன் படித்தவர்களாக ரசிக்க வைக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் காதல் ததும்பும் சில பாடல்கள் இருந்திருக்கலாம். படத்தில் அடிக்கடி வரும் இளையராஜா பாடல்கள் பொருத்தமாக அமைந்துவிட்டதால் படத்தின் தனிப் பாடல்கள் அதன் முன் தோற்றுவிடுகின்றன என்பதே உண்மை. இருப்பினும் ‘காதலே...காதலே...’ உருக வைத்துவிடுகிறது. அதே போல பின்னணி இசையிலும் இசையால் காதலின் உணர்வை இனிமையாய் வெளிப்படுத்தியிருக்கிறார். சண்முகசுந்தரம், மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களுடனேயே சேர்ந்து பயணிக்கிறது. காதல் படங்களை நம் மனதுக்குள் செலுத்த நடிகர்களின் உணர்வுகள் முக்கியம், அதை அவர்களது குளோசப் காட்சிகள் மூலம் நமக்குள் புகுத்தி விடுகிறார்கள். இடைவேளைக்குப் பின் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மட்டுமே படத்தில் அதிகம் இருக்கிறார்களோ என்று எண்ண வைத்தாலும், அவர்களிருவரின் காதல் நடிப்பு மூலம் அதையும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். 96 - 4 சேர்த்து 100 தந்தாலும் தவறில்லை....

Share via: