செக்கச் சிவந்த வானம் - விமர்சனம்
27 Sep 2018
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ‘கேங்ஸ்டர்’ கதை கொண்ட படங்களில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘நாயகன்’ தனி முத்திரை பதித்த படம். அதன் பின் எத்தனையோ கேங்ஸ்டர் கதை படங்கள் வந்தாலும் அவற்றில் ‘நாயகன்’ படத்தின் பாதிப்பு கண்டிப்பாக இருக்கும்.
மணிரத்னமே மீண்டும் ஒரு முறை ‘நாயகன்’ போன்றதொரு படத்தை உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகமே. இந்த ‘செக்கச் சிவந்த வானம்’ கதையைப் பார்க்கும் போது அதை ‘நாயகன்’ படத்தின் மற்றுமொரு வடிவம் என்றும் சொல்லலாம்.
அதில் வரதராஜ முதலியார், இதில் சேனாபதி. அதில் ஒரு மகள், ஒரு மகன், இதில் ஒரு மகள், மூன்று மகன்கள். அதில் வரதராஜ முதலியாரின் சாம்ராஜ்ஜியம் மட்டும் காட்டப்பட்டது. இதில், மகன்களின் சாம்ராஜ்ஜியம் காட்டப்படுகிறது. படத்திற்கு ‘நாயகன் 2’ அல்லது மூன்று மகன்களைக் குறிக்கும் விதத்தில் ‘நாயகன் 3’ என்று கூட பெயர் வைத்திருக்கலாம்.
சென்னையின் மிகப் பெரும் கேங்ஸ்டர் பிரகாஷ்ராஜ். மனைவி ஜெயசுதாவுடன் திருமண நாளுக்காக கோயிலுக்குச் செல்லும் போது வெடிகுண்டு வைத்து அவர் மீது கொலைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்பாவைக் கொல்ல முயற்சித்தது யார் என்பதைத் தெரிந்து கொள்ள துபாயில் இருக்கும் இரண்டாவது மகன் அருண்விஜய், செர்பியாவில் இருக்கும் கடைசி மகன் சிம்பு ஆகியோர் சென்னையில் இருக்கும் அண்ணன் அரவிந்த்சாமியுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். கடைசியில் அண்ணன் அரவிந்த்சாமியே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல தம்பிகள் ஊருக்குப் பயணமாகிறார்கள். பின்னர், மாரடைப்பில் பிரகாஷ்ராஜ் இறந்துவிட, அப்பாவின் இடத்தை தனதாக்கிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. மேலும், சிம்புவின் புதுமனைவி டயானா எரப்பா கொல்லப்பட, அருண்விஜய்யின் மனைவி ஐஸ்வர்யா போதைப் பொருள் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு ஜெயிலுக்கு தள்ளப்பட, அருண் விஜய், சிம்பு ஆகியோரின் கோபப்பார்வை அண்ணன் அரவிந்த்சாமி மீது திரும்புகிறது. அப்பாவின் இடத்தைப் பிடிக்கத்தான் அவர் அப்படி செய்கிறார் என அருணும், சிம்புவிம் அண்ணனை எதிர்த்து பழி தீர்க்க நினைக்கிறார்கள். இந்த அண்ணன் தம்பி போட்டியில் யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என நான்கு ஹீரோக்கள். படத்தில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும் என படம் ஆரம்பிக்கும் போதே ஒரு பரபரப்பு ஏற்படுகிறது. முடிந்தவரை நால்வருக்கும் ‘நச்’ என்று சில காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். நடிப்பில் ஒருவரை மற்றவர் மிஞ்ச போட்டி போடுவது தெரிகிறது. கிடைக்கும் வாய்ப்பில் தனி முத்திரை பதிக்க நால்வருமே முயல்கிறார்கள். ஆனால், சர்வசாதாரணமாக அனைவரையும் ஓவர்டேக் செய்கிறார் விஜய் சேதுபதி. அவர் கதாபாத்தித்தை நக்கல், கேலி, கிண்டல் என ரசிகர்களின் மனமறிந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். தன் கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி தன் பாணியில் நடித்து வானத்தை நோக்கி சிக்சர் அடித்துவிட்டார் விஜய் சேதுபதி. அதில் சிம்புவும் சிக்கிக் கொள்வதுதான் ஆச்சரியம்.
விஜய்சேதுபதிக்கு மட்டும் படத்தில் ஜோடியில்லை. அரவிந்த்சாமிக்கு மனைவியாக ஜோதிகா, துணைவியாக அதிதிராவ் ஹைதரி. அருண்விஜய்யின் இலங்கைத் தமிழ் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்புவின் வெளிநாட்டுத் தமிழ்ப் பெண் மனைவியாக டயானா எரப்பா. இந்த நால்வரில் ஜோதிகாவுக்குத்தான் கூடுதல் காட்சிகள், வசனங்கள், நடிக்கவும் வாய்ப்பு.
கேங்ஸ்டர் பிரகாஷ்ராஜ், அவர் மனைவி ஜெயசுதா, இவர்களின் காதல் மகன்களின் காதலை விட யதார்த்தமாக உள்ளது. ஒரு கேங்ஸ்டர் என்றால் அவருக்கென ஒரு எதிரி இருக்க வேண்டும், அதற்காக தியாகராஜன்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு முழுமையான பாடல் கூட படத்தில் இடம் பெறாதது ரகுமானின் ரசிகர்களுக்குக் குறையாக இருக்கும். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத் தொகுப்பு கதையுடன் நெருக்கமாகப் பயணிக்கிறது.
ஒரு கேங்ஸ்டர் குடும்பத்தில் நடக்கும் பதவிச் சண்டைதான் படத்தின் மையம். அவர்களின் சண்டையை சினிமாவாகப் பார்த்தால் படம் பார்க்கும் ரசிகனுக்கும் ஏதோவொரு தாக்கம் வரவேண்டும். ஆனால், அப்படி எதுவும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது வரவில்லை. படம் முடிந்த பின் யார் மீதும் நமக்கு பரிதாபம் வரவேயில்லை.
கிளைமாக்சில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வருவதில் இயக்குனர் மணிரத்னம் தனியே தெரிகிறார்.
கெட்டவர்கள் வாழ்வதில்லை, வீழ்வார்கள், கடைசியில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என படத்தை முடித்திருக்கிறார் மணிரத்னம்.