ப. பாண்டி - விமர்சனம்

13 Apr 2017
காதல், எத்தனை காலங்கள் ஆனாலும் நம் மனதை விட்டு அகலாத ஒரு விஷயம். அதிலும் முதல் காதல் இருக்கிறதே, அது சாகும் வரை நம்மை விட்டுப் போகவே போகாது. இதுவரை எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். அனைத்துமே இளம் காதலர்களைப் பற்றிய படங்களாகத்தான் இருக்கும். ஆனால், 60 வயதைக் கடந்த ஒரு மனிதனின் காதலைப் பற்றிப் பார்த்திருக்கோமா..அப்படியே பார்த்திருந்தாலும் ‘ப.பாண்டி’ படத்தைப் போல அது இருந்திருக்குமோ என்றுதான் கேட்கத் தோணும். தனுஷுக்குள் இப்படி ஒரு இயக்கத் திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று இன்றுதான் நமக்குத் தெரிகிறது. ஆனாலும், வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்திருக்கிறார் தனுஷ் என்னும் இயக்குனர். 30 வயதை மட்டுமே கடந்த தனுஷ் ஒரு 60 வயது மனிதரின் மனதில் ஓடும் ஓட்டங்களை எப்படி இந்த வயதிலேயே தெரிந்து வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் என நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். நடிப்பிற்கு கொஞ்சம் ஓய்வு விட்டு வருடத்திற்கு இப்படி ஒரு படமாவது உங்களது இயக்கத்தில் கொடுங்கள் தனுஷ். ராஜ்கிரண், மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன், பேத்திகளுடன் இருக்கிறார். பேரன், பேத்திகள் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், மகன் பிரசன்னா அடிக்கடி மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் மகன் வெறுப்பாகப் பேச, அது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். போகும் வழியில் சிலர் அவருடைய முதல் காதலை ஞாபகப்படுத்தி விட தன் முதல் காதலியைத் தேடிப் போகிறார். அவரைச் சந்தித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ‘பவர் பாண்டி’யாக ராஜ் கிரண். தனக்குப் பிடித்தமான கதைகளில் மட்டுமே நடிப்பவர். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஏன் சம்மதித்தார் என்பது படத்தைப் பார்த்தபின்தான் புரிகிறது. அடடா...என்ன மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் தன் முதல் காதலிக்கு சாட்டிங்கில் மெசேஜ் அனுப்பும் போது அவரிடம் வெளிப்படும் அந்தக் காதல் இருக்கிறதே அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. மகன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கின்றானே என்ற ஆதங்கம், பேரன், பேத்திகளுடன் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தம், காதலியைச் சந்தித்த பின் வரும் பேரானந்தம் என பவர் பாண்டியின் நடிப்பில் பவர் அதிகம். இந்தக் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதே உண்மை. ராஜ்கிரணின் மகனாக பிரசன்னா, இந்தக் கால இளைஞர்களின் உணர்வை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். கிளைமாக்சில் அப்பா காலை பிடித்துக் கொண்டு அழும் காட்சியில் அழாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிரசன்னாவின் மனைவியாக சாயா சிங். ‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் சண்டைக் கோழியாக இருந்தவர், இந்தப் படத்தில் சராசரி மனைவியாக பாந்தமாக நடித்திருக்கிறார். பக்கத்து வீட்டுப் பையனாக ரின்சன். இப்படி கூட ஒரு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரலாம் என்பதில் திரைக்கதை ஆசிரியாக தனித்துத் தெரிகிறார் தனுஷ். ராஜ்கிரணும், இவரும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் தியேட்டர்களில் கைதட்டல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ராஜ்கிரணின் முதல் காதலியாக ரேவதி. பல வருடங்கள் கழித்து முதல் காதலன் தன்னைத் தேடி வரும் போது அவர் காட்டும் பரிவும், அன்பும், ஆதரவும் முதல் காதலில் தோற்றுப் போனவர்களுக்கு தங்கள் முதல் காதலியை மீண்டும் ஞாபகப்படுத்தும். ராஜ்கிரணின் இளமைத் தோற்றத்தில் தனுஷ். வழக்கம் போல நடிப்பில் விளையாடியிருக்கிறார். மடோனா அவரை விட்டுப் பிரியும் போது அவர் கண்களில் வரும் கண்ணீர், படம் பார்ப்பவர்களுக்கும் நிச்சயம் வரும். தனுஷின் காதலியாக மடோனா செபாஸ்டியன். இவரையெல்லாம் பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்கவில்லை என்றால்தான் தவறு. ஆனால், இவரே தனுஷ் மீது காதலில் விழுவது கொள்ளை அழகு. ஓரே காட்சியில் வந்தாலும் திவ்யதர்ஷினி, கௌதம் மேனன், ரோபோ சங்கர் ‘டச்’ செய்து விடுகிறார்கள். தனுஷின் நண்பனாக ‘3’ படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று எங்கோ போய்விட்டார். அதே போல, இந்தப் படத்தில் தீனா, தனுஷ் நண்பனாக அறிமுகமாகியிருக்கிறார். தனுஷ் ராசி இவரையும் உயரத்தில் கொண்டு செல்லட்டும். ராஜ்கிரணின் பேரனாக மாஸ்டர் ராகவன், பேத்தியாக சவி ஷர்மா மனதை அள்ளுகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைப்பில் பின்னணியும், பாடல்களும் படத்திற்கு பக்கபலம். திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும் தனுஷ் இந்தப் படத்தில் ஷான் ரோல்டனை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். கோடை விடுமுறை இந்த ‘ப. பாண்டி’ படம் மூலம் வெற்றிக் கொண்டாட்டத்தை நிச்சயம் ஆரம்பித்து வைக்கும். நடிகர்கள் ராஜ்கிரண் - பாண்டி ரேவதி - பூந்தென்றல் பிரசன்னா - ராகவன் சாயா சிங் - பிரேமா வித்யுலேகா ராமன் - பூங்கொடி ரின்சன் - வருண் தீனா - மணி ஆடுகளம் நரேன் - சந்திரசேகர் மாஸ்டர் ராகவன் - துருவ் பேபி சவி ஷர்மா - சாஷா சென்ராயன் - கஞ்சா விற்பவன் சிறப்புத் தோற்றம் கௌதம் வாசுதேவன் மேனன் ரோபோ சங்கர் பாலாஜி மோகன் திவ்ய தர்ஷினி கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - தனுஷ் இசை - ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு - வேல்ராஜ் பாடல்கள் - செல்வராகவன், தனுஷ், ராஜு முருகன் நிர்வாகத் தயாரிப்பு - வினோத் குமார் படத் தொகுப்பு - பிரசன்னா கலை - ஜெயச்சந்திரன் நடனம் - பாஸ்கர் சண்டைப் பயிற்சி - சில்வா ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி தயாரிப்பு மேற்பார்வை - சொக்கலிங்கம் மக்கள் தொடர்பு - ரியாஸ் அகமது

Share via: