காற்று வெளியிடை - விமர்சனம்
08 Apr 2017
30 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் படங்களைக் கொடுக்கும் இயக்குனராக ஒருவர் இருக்கிறார் என்பது சாதாரண விஷயமல்ல.
‘மௌன ராகம்’ காலத்திலிருந்து இன்று ‘காற்று வெளியிடை’ காலம் வரைக்கும் அன்று முதல் இன்று வரை இளைஞர்கள் மணிரத்னம் படங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பது ஒரு இயக்குனருக்குக் கிடைத்த வெற்றி.
எப்படி எல்லா காலத்திலும் இளைஞர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு இளமையுடன் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என பல இயக்குனர்களே அவரைப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு இயக்குனரிடமிருந்து வெளிவந்துள்ள படம்தான் ‘காற்று வெளியிடை’.
மற்ற இயக்குனர்கள் சொல்லும் காதலுக்கும் மணிரத்னம் சொல்லும் காதலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இந்தப் படத்திலும் காதல்தான் நீக்கமற நிறைந்திருக்கிறது.
வழக்கம் போல காதல், அதன் பின் மோதல் என தனது பாணியிலான படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். இருந்தாலும் அவருடைய முந்தைய காதல் படங்களுடன் ஒப்பிடும் போது இந்தக் ‘காற்று வெளியிடை’யில் ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
சண்டை விமான பைலட்டாக ஸ்ரீநகரில் இருக்கிறார் கார்த்தி. அதே ஊர் மருத்துமனைக்கு டாக்டராக வருகிறார் அதிதி ராவ் ஹைதரி. அதிதியைப் பார்த்ததும் கார்த்திக்குக் காதல். வழக்கம் போல அதிதி முதலில் மறுத்து பின் அவரும் காதலில் விழுகிறார். இருந்தாலும் கொஞ்சம் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட கார்த்தியை அதிதிக்கு அடிக்கடி பிடிக்காமல் போகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்தி தனக்கு சரிப்பட்டு வர மாட்டார் என நினைத்து இருவரும் பிரிந்துவிடலாம் என்று அதிதி சென்று விடுகிறார். கார்த்தி கார்கில் போரில் ஈடுபட்டு, பாகிஸ்தான் வீரர்களிடம் சிக்கி போர்க் கைதியாக பாகிஸ்தான் சிறைக்குள் அடைபடுகிறார். கார்த்தி சிறையிலிருந்து வெளியில் வந்தாரா, பிரிந்து போன தன் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காஷ்மீர், ராணும், காதல் என்றதும் மீண்டும் ஒரு ‘ரோஜா’ ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘ரோஜா’வில் அரவிந்த்சாமிக்கும், மதுபாலாவுக்கும் இடையில் திருமணத்திற்குப் பிறகு வரும் காதல் நம்மை அவர்களுடன் பயணிக்க வைத்தது. ஆனால், இந்த ‘காற்று வெளியிடை’யில் ஏனோ, விட்ட குறை தொட்ட குறையாக இருக்கிறது.
மீசை இல்லாமல் அப்படியே ஹிந்தி ஹீரோ போலவே இருக்கிறார் கார்த்தி. ‘சுருக்’கென வரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிதியிடம் சண்டை போடுவதும், பின் தன் தவறை உணர்ந்து பணிந்து போவதும் என காட்சிக்குக் காட்சி கலக்குகிறார். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் தனி உத்வேகத்துடன் பார்க்கிறார், நடக்கிறார், நடனமாடுகிறார். இந்த அளவிற்கு ஒரு ஸ்டைலிஷான கார்த்தியை இதுவரை பார்த்திருக்க முடியாது என தாராளமாகச் சொல்லலாம். சந்தேகமேயில்லாமல் கார்த்தியின் குறிப்பிடத்தக்க படங்களின் பட்டியலில் இந்த ‘காற்று வெளியிடை’யும் நிச்சயம் இடம் பிடிக்கும்.
அதிதி ராவ் ஹைதரி, எப்போதோ தமிழ்ப் படத்தில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படம் மூலம் ரீ என்ட்ரி ஆகிறார். நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால், நமக்குத்தான் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோயின் போல தெரிய மாட்டேன் என்கிறது. ‘மௌன ராகம் - ரேவதி’, ‘அக்னி நட்சத்திரம் - அமலா’, ‘ரோஜா - மதுபாலா’, ‘இருவர் - ஐஸ்வர்யா ராய்’, ‘அலைபாயுதே - ஷாலினி’, ‘ஓ காதல் கண்மணி - நித்யா மேனன்’ ஆகியோரைப் பார்த்த நமக்கு அதிதி ராவ் அந்நியமாகவே தெரிகறார். இன்னும் இளமையான நாயகி கிடைக்கவில்லையா மணி சார்...???.
ஆர்.ஜே.பாலாஜி, மணிரத்னம் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என அடுத்து தரப் போகும் பேட்டிகளில் சொல்லிக் கொள்ளலாம். மற்ற நடிகர்கள் என்ற பட்டியலில் படத்தில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. படம் முழுவதும் இடைவெளி இல்லாமல் காட்சிக்குக் காட்சி, கார்த்தி, அதிதி மட்டுமே இருக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரும் பலமே ரவிவர்மனின் ஒளிப்பதிவுதான். இமயமலை அழகையும், காஷ்மீர் அழகையும், ஏன் பாகிஸ்தான் என்று அவர்கள் காட்டும் பகுதியும் கூட அவரது ஒளிப்பதிவில் அழகாகவே தெரிகிறது.
அடுத்து ஏ.ஆர்.ரகுமான், மற்ற இயக்குனர்களுக்கு எப்படியோ, மணிரத்னத்திற்கு மட்டும் காலம் கடந்தும் நிற்கும் எவர்கிரீன் பாடல்களைப் போட்டுக் கொடுத்து விடுவார்.
மணிரத்னத்தின் படங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் பல படங்களைப் பட்டியலிடுவார்கள். அந்தப் பட்டியலில் இதற்கு முன் இடம் பிடித்துள்ள படங்களுடன் இந்தப் படம் போட்டி போட முடியாது.
இருந்தாலும் மணிரத்னம் படம் என்றால் கண்டிப்பாகப் பார்ப்பேன் என்று சொல்லும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தைத் தராது.