8 தோட்டாக்கள் - விமர்சனம்
08 Apr 2017
வியக்க வைக்கும் விதத்தில் வித்தியாசமான கதைக்களங்களுடன் சில புதிய இளம் இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வந்திருப்பவர் இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
அட, இப்படி கூட ஒரு கதையை உருவாக்க முடியுமா என்ற விதத்தில் ஒரு பரபரப்பான த்ரில்லரில் நடுத்தரக் குடும்பத்து தலைவர் ஒருவரின் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் வெற்றி, அவருக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பிக்-பாக்கெட் திருடன் ஒருவனிடம் பறி கொடுக்கிறார். அதனால், காவல் துறையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார். காணாமல் போன அந்த துப்பாக்கியைத் தேட ஆரம்பிக்கிறார் வெற்றி. ஒரு வங்கிக் கொள்ளை மற்றும் கொலையில் அந்தத் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் வேலை நாசரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் தீவிர விசாரணையில் இறங்குகிறார். கூடவே, வெற்றியையும் தன்னுடன் வைத்துக் கொள்கிறார். அடுத்தடுத்து மேலும் சில கொலைகள் நடக்க நாசரும், வெற்றியும் செய்வதறியாது திகைக்கிறார்கள். துப்பாக்கியை வைத்துக் கொண்டு அந்தக் கொலைகளை செய்பவனை அவர்கள் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுக நாயகன் வெற்றி முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார். கொஞ்சம் கடுகடுப்பான முகத்துடன் அந்தக் கதாபாத்திரமாகவே இருக்கிறார். செய்யாத கொலைக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர், காவல் நிலையத்திலும் மற்ற யாருடனும் அதிகம் பழகாதவர் என தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். துப்பாக்கியைப் பறிகொடுத்த பின் அவரிடம் காணப்படும் பரிதவிப்பு இயல்பாக அமைந்துள்ளது.
விசாரணை அதிகாரியாக நாசர். இம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு சொல்லித் தரவா வேண்டும்.
எம்.எஸ்.பாஸ்கரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பெற்ற பிள்ளைகளும் மதிக்காமல், வேலை செய்த இடத்திலும் மதிக்காமல், பணத்தைக் கடனாகக் கூட வாங்க முடியாமல் அவர் தேர்ந்தெடுக்கும் வழி அதிர்ச்சியாக உள்ளது. வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.
அபர்னா பாலமுரளி படத்தின் நாயகி. ஒரு பரபரப்பான ஆக்ஷன் கதையில் அவருடைய காதலுக்கு அதிக இடமில்லை.
படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். குறிப்பாக ஹோட்டலில் வெற்றியும், எம்.எஸ்.பாஸ்கரும் சந்தித்துப் பேசும் காட்சி நீளமோ நீளம்.
அறிமுக இயக்குனரும், அறிமுக நடிகரும் இணைந்து ஒரு நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.