இலை - விமர்சனம்
23 Apr 2017
சினிமாத்தனமே இல்லாமல் நாயகர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் ஒரு படமா என ஆச்சரியப்பட வைக்கிறது ‘இலை’.
இப்படி ஒரு படத்தை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர் சுஜித் ஸ்டெபனோஸ் மற்றும் இயக்குனர் பினீஷ் ராஜ் முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
கிராமத்தில் ஏழை விவசாயியின் மகளாக இருக்கும் சுவாதி நாராயணன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த கிராமத்தில் அவள் படிப்பதை அவருடைய அப்பாவைத் தவிர வேறு யாருமே விரும்பவில்லை. அந்த கிராமத்தின் பெரிய மனிதருக்கு தன் மகள்தான் முதல் மதிப் பெண் பெற வேண்டும் என்பது ஆசை. அதனால், சுவாதியை கடைசி பரீட்சைக்கு செல்ல விடாமல் தடுக்க, ஆளை வைத்து சுவாதியின் அப்பாவை பலமாகத் தாக்கி விடுகிறார்.
அப்பா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட, கைக்குழந்தையாக இருக்கும் தன் தங்கையை வைத்துக் கொண்டு எப்படி பள்ளிக்குப் பரீட்சை எழுதச் செல்வது என சுவாதி தடுமாறிக் கொண்டிருக்கிறார். அவர் பரீட்சைக்குக் சென்றாரா, அவருடைய அப்பாவிற்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
இலை என்ற கதாபாத்திரத்தில் சுவாதி நாராயணன். கிராமத்துப் பெண்ணுக்கே உரிய தோற்றத்துடன் இருக்கிறார். படித்து பெரிய பதவியில் அமர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். எப்படியாவது பரீட்சைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர் காட்டும் தவிப்பு, படம் பார்ப்பவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும். இலை கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து மனம் கவர்கிறார்.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் புதுமுகங்களே. அந்தந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார்கள். இலையின் தம்பியாக நடித்திருக்கும் அஷ்வின் சிவா கவனிக்க வைக்கிறார்.
சினிமாத்தனமில்லாத கதையை சினிமாத்தனமில்லாமல் கொடுக்க முயற்சித்து கொஞ்சம் நாடகத் தன்மையுடன் கொடுத்ததைத் தவிர்த்திருக்கலாம்.
அதிலும், பரீட்சை எழுதுவதற்காக குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு இலை ஓடுகிறார், ஓடுகிறார், பக்கத்து மாநிலத்துக்கே ஓடி விடுவார் போல ஓடுகிறார்.
இருந்தாலும் பெண்களின் படிப்பைப் பற்றிச் சொன்னதற்காகவே இந்தப் படத்தைப் பாராட்டலாம்.
படம் முடிந்த பின் விஎப்எக்ஸ் காட்சிகளாக எவையெவை எடுக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறார்கள், நம்பவே முடியவில்லை. அவ்வளவு இயல்பாக பல காட்சிகள் விஎப்எஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.
நடிப்பு - Dr. சுவாதி நாராயணன், சுஜித் ஸ்டெபனோஸ், Dr. கிங் மோகன், ஸ்ரீதேவி அனில், அஷ்வின் சிவா மற்றும் பலர்
இசை – விஷ்ணு வி.திவாகரன்
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல்
வசனம் – ஆர்.வேலுமணி
கலை – ஜைபின் ஜெஸ்மஸ்
எடிட்டிங் – டிஜோ ஜோசப்
மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்
நிர்வாகத் தயாரிப்பு _ ஷோபன் குமார்
தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன்
தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர் நேஷனல்
வெளியான தேதி - 21 ஏப்ரல் 2017
Tags: ilai