ஒத்த ஓட்டு முத்தையா - விமர்சனம்

15 Feb 2025

ஒரு தேர்தலில் நின்று ஒரே ஒரு ஒட்டு வாங்கியதால் "ஒத்த ஓட்டு முத்தையா" என்று அழைக்கப்படும் கவுண்டமணியின் கதையைச் சொல்கிறது. மூன்று தங்கைகளுக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் முத்தையா, தனது அரசியல் எதிரிகளுக்கு பாடம் புகட்ட மீண்டும் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நிற்கிறார். குடும்பத்தையும், அரசியலையும் ஒரே சமயத்தில் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் மையக் கதை.  

பத்தாண்டுகளுக்குப் பின் திரைப்படத்தில் நடிக்க வரும் கவுண்டமணியிடம் ரசிகர்கள் நிறைய எதிர்பார்த்து சென்றால், கொஞ்சம் ஏமாற்றம்தான். காமெடி என்ற பெயரில் கவுண்டமணி பேசுவதெல்லாம் ரீல்ஸ் பார்ப்பது போன்ற உணர்வைத்தான் தருகின்றன. 80 வயதைக் கடந்த கவுண்டமணி இன்னும் அதே ‘நக்கல், நையாண்டி’யில்  நடித்து நம்மை அடிக்கடி கவர்கிறார்.   

கவுண்டமணிக்கு தங்கைகளாக நடிக்கும் மூவரும், "கவுண்டமணிக்கு பேத்தி மாதிரி இருக்காங்க" என்று ரசிகர்கள் கமெண்ட் அடிப்பதைத் தியேட்டரில் கேட்க முடிகிறது. அவர்களை குறைந்தபட்சம் மகள்கள் என்றாவது சொல்லியிருக்கலாம். யோகி பாபு மற்றும் பல பழைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் அவ்வப்போது மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள்.

 இயக்குநர் சாய் ராஜகோபால், அரசியலை நையாண்டி செய்யும் ஒரு ‘political satire’ படத்தைத் தர வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை முழுமையாக வெளிப்படுத்தாமல் திரைக்கதையில் அவ்வப்போது தடம் மாறுகிறார். சமாதி முன் தியானம் செய்வது, "இது வாய்ப்பில்லை ராஜா" போன்ற வசனங்கள், அரசியல் நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன. 

கவுண்டமணியின் பல பழைய வசனங்களை படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தி அதன் மூலமும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் இயக்குனர். 

 படம் முழுவதும் காமெடி, அரசியல் நையாண்டி, குடும்பக் கதை என பல தரப்புகளை இணைக்க முயற்சித்தாலும், எதுவும் முழுமையாக வெளிப்படவில்லை. அரசியல் பக்கம் கொஞ்சம், தங்கைகள்  காதல் பக்கம் கொஞ்சம் என அடிக்கடி படம் தடம் மாறுகிறது. மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தி, திரைக்கதையை ஒரு தெளிவுடன் அமைத்திருந்தால் இன்னும் அதிக ஓட்டுக்களை வாங்கியிருக்கலாம். 

Tags: otha votu muthaiya, goundamani

Share via: