நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – விமர்சனம்
21 Feb 2025
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலிக்கிறார். அந்தக் காதலுக்கு அந்தப் பெண்ணின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, காதலர்கள் பிரிகிறார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் சிம்பிளான கதை.
ஆனால், இந்தக் கதையை இயக்குனர் தனுஷ், இந்தக் காலத்து டிரென்டில் சுவாரசியமாகவும், ரசனையாகவும் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். அறிமுக மற்றும் வளரும் நட்சத்திரங்களை வைத்து இப்படி ஒரு படத்தைக் கொடுத்து இயக்குனராக ஹாட்ரிக் வெற்றியையும் பெற்றுவிட்டார் நடிகர் தனுஷ்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நரேன், சரண்யா தம்பதியினரின் ஒரே மகன் பவிஷ். கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கும் பணக்காரரான சரத்குமார் மகள் அனிகாவுக்கும் காதல். பவிஷ் பெற்றோர் அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதோடு அனிகாவின் அப்பா சரத்குமாரிடமும் சம்மதம் வாங்கச் செல்கிறார். அதற்காக பவிஷ் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அந்தஸ்து காட்டி அவமானப்படுத்துகிறார் சரத்குமார். அதன்பின் ஒரு முக்கிய காரணத்திற்காக அனிகாவை விட்டுப் பிரிய முடிவெடுக்கிறார் பவிஷ். அனிகாவுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க முடிவாக, அதற்கு பவிஷுக்கும் பத்திரிகை அனுப்புகிறார். கோவாவில் நடக்கும் அந்தக் கல்யாணத்தில் கலந்து கொள்ள பவிஷ் செல்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அறிமுக நாயகன் பவிஷ் நாராயண். முதல் படத்திலேயே நல்ல கதாபாத்திரம் கிடைப்பதும், அதில் நன்றாக நடித்து பெயர் வாங்குவதும் ஒரு சிலருக்கே அமையும். அது பவிஷுக்கு அருமையாக அமைந்துள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். உயரமாக இருக்கிறார், நமது கலரில் இருக்கிறார், நன்றாகப் பேசி நடிக்கிறார். இதை விட வேறு என்ன வேண்டும். தமிழ் சினிமாவுக்கு இளம் கதாநாயகன் ஒருவர் ரெடி.
பவிஷின் நெருங்கிய நண்பனாக மேத்யு தாமஸ். ‘லியோ’ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மலையாள நடிகர். படத்திற்குள் அவர் நாயகனுக்கு மட்டும் பக்கபலமாக இல்லை, இந்தப் படத்திற்கே பக்கபலம் அவர்தான். இப்படியான நண்பர்கள் இருந்தால் போதும் வாழ்க்கை வரமாக இருக்கும். நிறைய தமிழ்ப் படங்களில் நடியுங்கள் மேத்யு.
பவிஷ் காதலியாக அனிகா சுரேந்திரன். ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித், நயன்தாராவின் மகளாக நடித்தவர். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். டீன் ஏஜ் வயதுக்கேயுரிய தோற்றம். காதலியாக இருந்ததை விட மணப்பெண்ணாக இருக்கும் போது நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கொஞ்சமாக வந்தாலும் நிறைவான கதாபாத்திரத்தில் பிரியா பிரகாஷ் வாரியர். பவிஷின் மற்றொரு நண்பனாக வெங்கடேஷ் மேனன், அவரது காதலியாக ரம்யா ரங்கநாதன். கோவாவில் வெட்டிங் பிளானர் ஆக நடித்திருக்கும் பெண் ஆகியோரும் முக்கியத்துவமான கதாபாத்திரங்களில் கவனிக்க வைக்கிறார்கள். தனுஷ் படம் என்றாலே சரண்யாவின் நடிப்பு சிறப்பாக இருக்கும், இந்தப் படத்திலும் அப்படியே. ஆடுகளம் நரேன் நடிப்பும் அருமை.
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் பின்னணி இசைக்கான களம் நிறைய காட்சிகளாய் பரவி உள்ளது. பாடல்களில் ‘கோல்டன் ஸ்பாரோ’ ஏற்கெனவே சூப்பர் ஹிட். ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ, கலை இயக்குனர் ஜாக்கி இயக்குனருக்கு வலது, இடது கரமாய் இருந்திருக்கிறார்கள்.
இடைவேளை வரை காதல் கதையாகவும், இடைவேளைக்குப் பின் கல்யாணக் கதையாகவும் நகர்கிறது. படம். தியேட்டருக்குப் போனால் இரண்டு மணி நேரம் போவது தெரியாமல் ரசித்துவிட்டு வரலாம்.
Tags: dhanush, gv prakash, pavish, anikha, neek, nilavukku en men ennadi kobam