டிராகன் – விமர்சனம்
21 Feb 2025
பள்ளியில் நல்ல மாணவனாக இருந்தவன், கல்லூரியில் சேர்ந்து கெட்டுப் போய், மோசடி செய்து வேலைக்குச் சேர்ந்து, உயர்ந்து பின் சிக்கிக் கொண்டு தவித்த கதை.
இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பாடமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தவன் உழைப்பைத் திருடி வாழாதே, தோற்றாலும் மீண்டும் எழுந்து ஓடு, வெற்றி பெறுவாய் இதுதான் இந்தப் படத்தின் ஒரு வரி மெசேஜ். அதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி கடைசியில் நெகிழவும் வைத்துவிடுகிறார்.
பிரதீப் ரங்கநாதன் சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரே மகன். பள்ளியில் 96 சதவீத மார்க் எடுத்த மாணவன். அப்போது வந்த காதலை ஒரு பெண் ஏற்கவில்லை. அதனால், இஞ்சினியரிங் கல்லூரியில் பொறுக்கித்தனமாக மாறுகிறார். மொத்தமாக 48 அரியர்ஸ் வைத்திருக்கிறார். எந்த வேலையும் இல்லை என்பதால் காதலி அனுபமா பரமேஸ்வரனும் விட்டுப் போகிறார். அதனால், பிராடு செய்து போலி சான்றிதழ் வாங்கி ஐ.டி கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலை சேர்கிறார். திறமைசாலி என்பதால் படிப்படியாக மேனேஜர் வேலைக்கு உயர்கிறார். பணக்காரப் பெண்ணான கயது லோஹர் உடன் திருமண நிச்சயமும் நடக்கிறது. ஒரு நாள், கல்லூரி பிரின்சிபால் மிஷ்கின் பார்வையில் சிக்குகிறார் பிரதீப். அவரது மோசடியைக் கண்டுபிடிக்கும் மிஷ்கின், அவரை மீண்டும் கல்லூரிக்கு வந்து 48 அரியர்ஸ் எழுதி முடிக்கச் சொல்கிறார். இல்லை என்றால் அவரது அலுவலகத்தில் சொல்லிவிடுவதாக மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் மீண்டும் கல்லூரிக்குச் செல்கிறார் பிரதீப்.
‘லவ் டுடே’ படத்தில் இன்றைய இளைஞர்களின் காதலை தனது கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய பிரதீப், இந்த ‘டிராகன்’ படத்தில் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் சில இளைஞர்களின் கதாபாத்திரத்தில் மீண்டும் வாழ்ந்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை பிரதீப்பின் ஒன் மேன் ஷோ–வாக இருக்கிறது படம். மற்ற எல்லாருமே துணை கதாபாத்திரங்களாகவே இணைந்து வந்து போகிறார்கள். அந்த அளவிற்கு தனது நடிப்பால் படத்தை ஆக்கிரமித்து விட்டார் பிரதீப். மீண்டும் ஒரு வெற்றிப் படம், இன்றைய இளைஞர்களின் வரவு நிறையவே இருக்கும்.
பிரதீப்பின் முன்னாள் காதலியாக அனுபமா பரமேஸ்வரன். கொஞ்சமாக வந்தாலும் ஒரு திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைக்கிறார். காதல் என்பது ஆண்களுக்கு மட்டும் தவிப்பைத் தராது, பெண்களுக்கும் தவிப்பைத் தரும் என புரியவைக்கிறார்.
பிரதீப்பைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணாக கயது லோஹர். தமிழ் சினிமாவுக்கு ஒரு கிளாமர் அறிமுகம், நடிக்கவும் செய்கிறார். ஒரு ரவுண்டு வரலாம்.
கல்லூரி கதை என்றால் நண்பர்கள் இல்லாமலா . நெருங்கிய நண்பனாக விஜே சித்து. குட்டி ராகனாக ஹர்ஷத் கான். கல்லூரி பிரின்ஸிபாலாக மிஷ்கின். இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே மிஷ்கினுக்குப் பெயர் சொல்லும் ஒரு கதாபாத்திரம் இதுதான். கேஎஸ் ரவிக்குமார், கௌதம் மேனன், தேனப்பன் கொஞ்சமே வந்து போகிறார்கள்.
பிரதீப்பின் அப்பாவாக ஜார்ஜ் மரியான். படத்தின் கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனங்கள் இன்றைய பல இளைஞர்களுக்கு ஒரு சிறந்த பாடம். அம்மாவாக இந்துமதி. இவருக்கான பின்னணி குரல் வினோதினி வைத்தியநாதன் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரையே நடிக்க வைத்திருக்கலாம். இந்துமதியும் குறையில்லாமல் தான் நடித்திருக்கிறார்.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் அப்படியே கடந்து போகின்றன. பின்னணி இசைக்குரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். படத்திற்கான வசனங்கள் முக்கியமானவை. பல இடங்களில் கைதட்ட வைக்கின்றன. கல்லூரிக் காட்சிகளை வளைத்து வளைத்து எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி.
சில இடங்களில் லாஜிக் பார்த்திருக்கலாம். இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் பிரதீப் கல்லூரியில் மீண்டும் படிப்பது வெளியில் போகாமலா இருக்கும். சில குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரமும் பரபரப்பாக நகர்ந்து போகிறது.
Tags: dragon, ashwath marimuthu, pradeep ranganathan, anupama parameswaran