2 கே லவ் ஸ்டோரி - விமர்சனம்

15 Feb 2025

சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்) மற்றும் மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளிப் பருவத்தில் தொடங்கி, கல்லூரி, தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும் அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே இருப்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.  

ஒரு கட்டத்தில், கார்த்திக் பவித்ரா என்ற பெண்ணை காதலிக்கத் தொடங்குகிறார். பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டிருக்கும் கார்த்திக்கின் நட்பு பவித்ராவுக்கு பிடிக்கவில்லை. இதனால், மோனிகாவுடனான நட்பை முறித்துக் கொள்ளும்படி கார்த்திக்கிடம் கூறுகிறார் பவித்ரா. ஆனால், கார்த்திக் மோனிகாவின் நட்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி, பவித்ராவுடனான காதலை முறித்து விடுகிறார்.  

இதை அறிந்த மோனிகா, கார்த்திக் மற்றும் பவித்ராவை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். ஆனால், இந்த சமயத்தில் பவித்ரா ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார். தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, மோனிகா துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார். இதன்பின், கார்த்திக் மற்றும் மோனிகாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.  

இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? அல்லது இறுதிவரை நண்பர்களாகவே இருந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.  

இயக்குநர் சுசீந்திரன், இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அழகிய பயணத்தை பக்காவாக எடுத்துள்ளார். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல்தான் என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு, ஒரு ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே இருக்கலாம் என்பதை நேர்த்தியாக காட்டியுள்ளார்.  

ஜெகவீர் (கார்த்திக்), தனது கதாபாத்திரத்தை மிகவும் நம்பகத்தன்மையாக நடித்துள்ளார். காதலியின் மரணத்திற்குப் பின் அவரது துயரத்தை உணர்ச்சிமிகு நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். மீனாட்சி (மோனிகா), தனது கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாகவும், உண்மையாகவும் நடித்துள்ளார். குறிப்பாக, கார்த்திக்கை துயரத்தில் இருந்து மீட்டெடுக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.  

பாலசரவணன் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் மிகவும் ரசிக்கும் விதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் சிங்கம்புலியின் அலப்பறை அட்டகாசமாக இருந்தது.  

டி.இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணா, படத்தின் அழகை மேலும் உயர்த்தியுள்ளார். குறிப்பாக, காதல் மற்றும் துயர காட்சிகளில் ஒளிப்பதிவு மிகவும் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.  

 ஒரு ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே இருக்கலாம் என்பதை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. காதல், நட்பு, துயரம் என பல உணர்வுகளை ஒரே படத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். நகைச்சுவை காட்சிகள் மற்றும் உணர்ச்சிமிகு நடிப்புகள் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. இந்த படம், 2K தலைமுறையினரின் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது.

Tags: 2 k love story, suseenthiran, imman

Share via: