பேபி & பேபி - விமர்சனம்

15 Feb 2025

ஜெய், தனது பெற்றோரை எதிர்து பிரக்யாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் துபாயில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. இதை அறிந்த ஜெய்யின் குடும்பத்தினர், குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று கோவைக்கு வர அழைக்கின்றனர். இதனால் ஜெய் குடும்பத்துடன் கோவைக்குக் கிளம்புகிறார்.  மறுபக்கம், யோகி பாபு தனது அப்பாவின் தொல்லைகளால் துபாயில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாய் தன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அப்பா அழைக்கவே, யோகி பாபு தன் குடும்பத்துடன் மதுரைக்குக் கிளம்புகிறார்.  

விமான நிலையத்தில், ஜெய் மற்றும் யோகி பாபுவின் குழந்தைகள் எதிர்பாராத விதமாக மாறிவிடுகின்றன. இரண்டு குடும்பங்களும் குழந்தைகள் மாறியதை தெரிந்து கொள்ளாமல், விமானத்தில் ஏறிய பிறகே தெரிந்து கொள்கிறார்கள். அதன்பின்னர் தங்கள் குழந்தைகளை மீண்டும் மாற்றிக் கொள்ள முயற்சிக்கும் போது அடுத்தடுத்து சிக்கல் வருகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.  

ஜெய், தனது எதார்த்தமான நடிப்பில் மிகவும் நம்பகத்தன்மையாக திகழ்கிறார். குழந்தையை பிரிந்து இருக்கும் காட்சிகளில் அவரது உணர்ச்சிமிகு நடிப்பு பாராட்டத்தக்கது. யோகி பாபு, நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் வெற்றிகரமாக நடித்தாலும், சில இடங்களில் அவரது நடிப்பு வொர்க் அவுட் ஆகியுள்ளது.  

பிரக்யா நக்ரா மற்றும் சாய் தன்யா, தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தையை பிரிந்து இருக்கும் காட்சிகளில் இருவரும் மிகவும் உணர்ச்சிமிகு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  

சத்யராஜ், கீர்த்தனா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆர்.ஜே விக்னேஷ்காந்த், ராமர் போன்றவர்கள் தங்கள் பாத்திரங்களில் முழுமையாக ஈடுபட்டு, கதையை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளனர்.  

இயக்குனர் பிரதாப், இரண்டு குடும்பங்களுக்கு இடையே குழந்தை மாறிய கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால், நகைச்சுவை காட்சிகள் சில இடங்களில் சொதப்பியுள்ளன. தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து, கதையின் இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இரண்டாம் பாதியில் டான்ஸ், பாடல்,  போன்ற காட்சிகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கின்றன.  

டி.இமானின் இசை சுமாரான ரகத்தில் உள்ளது. "ஆரா அமுதே" பாடல் மட்டும் பார்வையாளர்களை தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பெரிதாக எடுப்படவில்லை.  டி.பி சாரதியின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் முகபாவங்களை கண்ணை கவரும் விதத்தில் படம்பிடித்துள்ளார்.  

இந்த படம், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சிக்கிறது. ஆனால், கதையின் இரண்டாம் பாதி மற்றும் தேவையில்லாத காட்சிகள் படத்தின் தரத்தை குறைத்துள்ளன. இருப்பினும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும் இந்த படம், குடும்பத்துடன் பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

Tags: baby and baby

Share via: