தினசரி - விமர்சனம்
15 Feb 2025
ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த், தனது ஐ.டி.வேலையில் வெற்றிகரமாக இருந்தாலும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற பேராசை கொண்டவராக உள்ளார். அவரது கனவு, தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும் என்பதுதான். இதனால், அவர் தனது வாழ்க்கையை மேலும் உயர்த்திக் கொள்ளலாம் என்று நம்புகிறார். ஆனால், நாயகி சிந்தியா லூர்தே, அதிக சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொண்டு வாழ விரும்புகிறார். இவர்களின் எதிர்மறையான எண்ணங்கள் திருமணத்திற்குப் பிறகு வெளிப்படுகின்றன, இதனால் குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே கதையின் மையம்.
ஸ்ரீகாந்த், ஒரு பேராசை கொண்ட குடும்பஸ்தனாக தனது நடிப்பில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அவரது மனம் வருந்தி தடுமாறும் காட்சிகளில் அவரது நடிப்பு மிகவும் உண்மையாக உணர்த்தப்படுகிறது. பாடல் காட்சிகளில், இளமையின் எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மனமாற்றங்கள் போன்ற உணர்வுகளை அவர் மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்.
சிந்தியா லூர்தே, அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண்ணாக தனது கதாபாத்திரத்தை நன்றாக ஏற்று நடித்திருக்கிறார். தன்னம்பிக்கையின் மூலம் தனது நடிப்பில் ஒரு தனித்துவத்தை காட்டியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் குடும்பத்தினராக எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, நண்பர்களாக பிரேம்ஜி, கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ஆகியோரும், சிறப்புத் தோற்றத்தில் ராதாரவி போன்றவர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களில் முழுமையாக ஈடுபட்டு, கதையை மேலும் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை, படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. பாடல் வரிகள் எளிமையாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளன. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்து, காட்சிகளுக்கு உணர்வூட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகளில் ஸ்ரீகாந்தை இளமையாக காண்பித்திருக்கும் காட்சிகள் கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளன.
ஜி.சங்கர் எழுதி இயக்கியுள்ள இந்த படம், தற்போதைய தலைமுறையினர் முன்னேற்றம் என்ற பெயரில் பணத்தின் பின்னால் ஓடி, வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை இழந்து விடுகிறார்கள் என்பதை மிகவும் கமர்ஷியலாக வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் வசனக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் எந்தவித சுமையும் இன்றி பணியாற்றியிருக்கிறார்.
காதல், பாடல், காமெடி போன்ற அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இருந்தாலும், இயக்குநர் இவற்றை காட்சி மொழியின் மூலம் வெளிப்படுத்தாமல், வசனங்கள் மூலமாகவே வெளிப்படுத்துவது கதையை சற்று தொய்வடைய செய்துள்ளது. இருப்பினும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையின் உண்மையான புரிதலையும் படம் நன்றாக வெளிப்படுத்தியுள்ளது.
தற்போதைய தலைமுறையினருக்கு வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை புரிய வைக்கிறது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.
Tags: dinasari, srikanth