காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்

14 Feb 2025

ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் நாராயணன் இசையமைப்பில் லிஜோமோள் ஜோஸ்,  அனுஷா, ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், தீபா நடித்துள்ள படம்.

ஒரே பாலின காதல் கதைகள் தமிழ் சினிமாவில் மிகவும் அபூர்வமாக வரும். சமீபமாக ஓரிரு படங்கள் இப்படி வர ஆரம்பித்துள்ளன. இந்தப் படம் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் காதலைப் பற்றிச் சொல்லியிருக்கும் படம். ஆனால், அதை எந்தவிதமான ஆபாசக் காட்சிகளும் இல்லாமல் கொடுத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

கணவர் வினீத்தைப் பிரிந்து வாழ்பவர் ரோகிணி. முற்போக்கான சிந்தனை கொண்ட ரோகிணியின் ஒரே மகள் லிஜோ மோள் ஜோஸ். தான் ஒருவரைக் காதலிப்பதாகச் சொல்லும் லிஜோ அவரை அம்மா ரோகிணியிடம் அறிமுகப்படுத்த விரும்புகிறார். ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று அவரது வருகைக்கு நாள் குறிக்கப்படுகிறது. கலேஷ் மற்றும் அனுஷா வீட்டிற்கு வருகிறார்கள்.

கலேஷ்தான் தனது மகள் லிஜோவின் காதலன் என ரோகிணி நினைக்க, அவரல்ல தான் அனுஷாவைக் காதலிப்பதாகச் சொல்லி அதிர்ச்சி தருகிறார் லிஜோ.  அனுஷாவை அடித்து விரட்டுகிறார் ரோகிணி. பின் தனது கணவர் வினீத்தை துணைக்கு அழைக்கிறார். இருவரும் சேர்ந்து லிஜோவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரே ஒரு வீடு, நான்கைந்து கதாபாத்திரங்கள், ஒரே நாளில் நடக்கும் கதை. அந்த அழற்சி தெரியாமல் உணர்வுக் குவியலாக இரண்டு மணி நேரப் படத்தைக் கடத்தியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

திறமையான நடிகர்களை இப்படத்திற்காகத் தேர்வு செய்ததற்காக இயக்குனரை முதலில் பாராட்ட வேண்டும். இப்படியான ஒரு சூழலை அபூர்வமாகத்தான் கேள்விப்பட்டிருக்க முடியும். அந்த உணர்வுகளை உணர்வுபூர்மாக நடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. படத்தில் நடித்துள்ள அனைவருமே அதை மிகவும் ‘மெச்சூர்டாக’ செய்துள்ளார்கள்.

குறிப்பாக லிஜோ மோள் ஜோஸ் அவரது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதம் சிறப்பு. பொதுவான எதிர்பாலின காதலலை விட இப்படி ஓரின காதலில் உள்ளவர்கள் வெறித்தனமாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அளவுக்கான தீவிரமான காதலை மிகவும் அழுத்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறார் லிஜோ. காதலிக்காக அம்மாவை விட்டுப் பிரியக் கூடத் தயங்காத அளவுக்கான தீவிரமான காதல். இவரது காதலியாக நடித்திருக்கும் அனுஷாவும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களது நண்பனாக கலேஷ் ராமானந்த் நட்புக்கு இலக்கணமாக இருக்கிறார்.

தனது மகள் இப்படிக் காதலிக்கிறாரே என்ற ஆற்றாமையை ஆவேசத்துடனும் கோபத்துடனும் வெளிப்படுத்துகிறார் ரோகிணி. அதற்கு எதிராக பொறுமையாக அந்த சூழலைக் கையாள முயற்சிக்கிறார் வினீத். இவர்கள் வீட்டுப் பணியாளாக தீபாவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

ரோகிணியின் அந்த வீடு, அதன் உட்புற அழகு, அந்த வீட்டையும் ஒரு கதாபாத்திரமாய் காட்டியிருக்கும்  ஒளிப்பதிவாளர் ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது. கண்ணன் நாராயணன் பின்னணி இசையில் உணர்வுகளின் குவியல்களை இன்னும் குவிக்க வைக்கிறார்.

இப்படி ஒரு படமா என சிலருக்குக் கேள்வி வரலாம்.  இப்படியான சில காதல்களும் இந்த சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  படத்தின் முடிவு சரியா, தவறா, இப்படிக் காதலிப்பவர்களை எப்படி சமாளிப்பது என எதுவும் சொல்லாமல் திடீரென முடித்தது போன்ற கிளைமாக்ஸ் மட்டும் படத்தில் உறுத்தலாக உள்ளது.

Tags: kadhal enbadhu podhu udamai

Share via: