நாடு - விமர்சனம்

02 Dec 2023

சரவணன் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், தர்ஷன், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்குப் பிறகு ஒரு அருமையான கதையுடன் மீண்டும் வந்திருக்கிறார் சரவணன். இன்னமும் அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாத சில கிராமங்களின் உண்மை நிலை என்ன என்பதை வெட்டவெளிச்சமாய் காட்டியிருக்கிறார்.

கொல்லிமலையில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் மருத்துவமனை இருக்கிறது, ஆனால் மருத்துவம் பார்க்க டாக்டர்கள்தான் இல்லை. அந்த ஊர் மக்களின் கடும் முயற்சியால் மகிமா நம்பியார் டாக்டராக வந்து வேலை பார்க்க ஆரம்பிக்கிறார். அவரும் ஓரிரு வாரங்களில் ஊரை விட்டுப் போய்விடுவேன் எனச் சொல்கிறார். அவர் அந்த ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதற்காக கிராமத்து இளைஞர் தர்ஷன், ஊர் தலைவர் சிங்கம்புலி மற்றும் ஊரார் என்னென்னமோ செய்கிறார்கள். இதனிடையே, மகிமாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. மகிமா அந்த மலை கிராமத்திலேயே தங்குகிறாரா அல்லது திருமணம் செய்வதற்காக ஊரை விட்டுப் போகிறாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நீட் தேர்வு காரணமாக நல்ல மதிப்பெண் எடுத்திருந்தும் டாக்டருக்குப் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் துயர நிகழ்வை இந்தப் படத்தில் சேர்த்திருக்கிறார் இயக்குனர். ஏழை மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்களே படித்து மருத்துவர் ஆனால்தான் நடக்கும். அப்படி நடத்தவிடாமல் தடுக்கும் நீட் தேர்வை படத்தில் சரியாக விமர்சித்ததற்கு இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.

கிராமத்து இளைஞராக தர்ஷன். ஆச்சரியப்படும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் அப்படியே ஒன்றிப் போயிருக்கிறார். நல்ல குணம் கொண்டவராக இருந்தாலும் அந்த கிராமத்தை விட்டுப் போவேன் எனச் சொல்லும் மகிமா நம்பியார், எப்படியாவது அந்த கிராமத்திலேயே தங்கிவிட மாட்டாரா என ஏங்க வைக்கிறார்.

ஊர் தலைவர் சிங்கம்புலி, தர்ஷனின் அப்பா ஆர்எஸ் சிவாஜி, தர்ஷனின் நண்பர் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

சத்யாவின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் உருக வைக்கிறது. மலைகிராமத்தில் ஒவ்வொரு மூலையிலும் பயணித்திருக்கிறது சக்திவேலின் கேமரா.

படத்தின் முடிவு நம்மை என்னவோ செய்துவிடுகிறது. மலையில் இருக்கும் மக்களுக்குக் கூட மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் நாள் என்று வருமோ என்று கலங்க வைத்துவிடுகிறது.

Tags: naadu, tharshan, mahima nambiar

Share via: