அன்னபூரணி - விமர்சனம்

01 Dec 2023

நீலேஷ் குமார் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.


நயன்தாரா தனி கதாநாயகியாக நடித்து வெளிவந்த சில படங்கள் த்ரில்லர் படங்களாகவே வெளிவந்தன. இந்தப் படத்தில் ஒரு அப்பா, மகள் சென்டிமென்ட் கதையில் நடித்து தனது தனி கதாநாயகி பாதையை மாற்ற முயற்சித்துள்ளார்.

 

ஸ்ரீரங்கம் கோவிலில் மடப்பள்ளியின் தலைமை சமையல்காரராக ஐந்து தலைமுறைகளாக இருந்து சேவை செய்யும் குடும்பம் நயன்தாரா குடும்பம். அவருக்கோ ‘செப்’ ஆக வேண்டும் என்பது சிறு வயது முதலே ஆசை. ஆனால், பிராமணப் பெண் ‘செப்’ ஆனால், நான் வெஜ் சமைக்க வேண்டும், ருசி பார்க்க வேண்டும் என மறுக்கிறார் அவரது அப்பா அச்யுத் குமார். எதிர்ப்பை மீறி வீட்டுக்குத் தெரியாமல் கேட்டரிங் படிக்கிறார் நயன்தாரா. ஒரு கட்டத்தில் அது அப்பாவுக்குத் தெரிய வர உடனடியாக திருமணம் பேசி முடிக்கிறார்கள். திருமணத்தன்று சென்னைக்குப் போய்விடுகிறார் நயன்தாரா. அங்கு ஒரு ஸ்டார் ஹோட்டலில் வேலைக்குச் சேர்கிறார். சமையலறையில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அவருக்கு ருசி பார்க்கும் தன்மை போய்விடுகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

 

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்குள் தன்னை அப்படியே பொருத்திக் கொள்பவர் நயன்தாரா. இந்தப் படத்தில் பிராமணக் குடும்பத்துப் பெண்ணாக, பிறகு செப் ஆக என அந்தந்த காட்சிக்கான மாற்றங்களை அவ்வளவு ரசித்து செய்திருக்கிறார். இந்தப் படத்தை நயன்தாரா பெரிதும் நம்புகிறார் என்பதை அவரது நடிப்பை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

 

நயன்தாராவின் நண்பனாக ஜெய். ஒருதலையாய் காதலித்தாலும் தன் காதலை நயன்தாராவிடம் சொல்லாமலே இருக்கிறார். இந்தியாவின் பிரபல செப் ஆகவும், ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் தலைமை செப் ஆகவும் இருப்பவர் சத்யராஜ். இவரைப் பார்த்துதான் நயன்தாராவுக்கு செப் ஆக வேண்டும் என்றை ஆசை சிறு வயதிலேயே ஏற்படுகிறது. அவரது ஹோட்டலுக்கே சென்று அவரிடமே வேலைக்குச் சேர்கிறார் நயன்தாரா. சத்யராஜின் மகனாக நயன்தாராவை எதிர்க்கும் போட்டி செப் ஆக கார்த்திக் குமார்.

 

கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி கதாபாத்திரங்கள் குறிப்பிடும்படி இல்லை. நயன்தாராவின் அப்பா அச்யுத் குமார், அம்மா ரேணுகா, பாட்டி சச்சு அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

 

தமன் பின்னணி இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு அறிமுக இயக்குனருக்கு நன்றாக கை கொடுத்திருக்கிறது.

 

படத்தின் இடைவேளைக்குப் பின் டிவி ஷோ பார்ப்பது போல படம் முழுவதுமே நகர்கிறது. டிவி ஷோ போட்டி இல்லாமல் வேறு விதமாக கதையமைத்திருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

Tags: annapoorani, nayanthara, jai, thaman

Share via: