பார்க்கிங் - விமர்சனம்
01 Dec 2023
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பலரது வாழ்க்கையில் இது போன்ற பார்க்கிங் சண்டைகள், பிரச்சனைகள் நடந்திருக்கலாம். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். தங்களது காரையோ, பைக்கையோ நிறுத்துவதற்கு யாராவது இடைஞ்சல் செய்தால் சண்டை வரை போனவர்கள் நிறைய உண்டு. இந்தப் படத்தில் கொலை முயற்சி வரை போகிறார்கள்.
ஹரிஷ் கல்யாண், இந்துஜா இளம் தம்பதிகள், இந்துஜா கர்ப்பிணியாக இருக்கிறார். இவர்கள் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் புதிதாக குடி போகிறார்கள். ஹரிஷ் கல்யாண் கார் ஒன்றைப் புதிதாக வாங்கி வீட்டு பார்க்கிங்கில் நிறுத்த ஆரம்பித்ததும் ஹரிஷுக்கும், பாஸ்கருக்கும் இடையில் சண்டை ஆரம்பமாகிறது. பதிலுக்கு பாஸ்கரும் புது கார் ஒன்றை வாங்கி அவரும் தன் காரை பார்க்கிங்கில் நிறுத்துவேன் எனக் கூற சண்டை பெரும் மோதலாக மாறுகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பலரது வீடுகளில் நடக்கும் சண்டையை அப்படியே உள்ளது உள்ளபடி படமாக்கியிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சினிமாத்தனமாக அமைத்துவிட்டார். அதையும் கதையின் போக்கில் நெகிழ்ச்சியுடன் முடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நமது வாழ்க்கையிலிருந்தே ஒரு கதையை எடுத்து அதைப் படமாகக் கொடுத்த விதத்தில் பாராட்டுக்களைப் பெறுகிறார் இயக்குனர்.
ஹரிஷ் கல்யாண் அவரது நடிப்பில் பாஸ்கர் மீதான வெறுப்பு, கோபம் ஆகியவற்றை அவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நினைப்பது நடக்க வேண்டும் என்பதற்காக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் சீக்கிரம் வந்து காரை நிறுத்தப் போட்டி போடுவது எல்லாம் தனி ரகம். இளம் வயதுக்குரிய ஈகோவை அப்படியே காட்டியிருக்கிறார்.
ஹரிஷிடம் அட்ஜஸ் செய்து கொண்டு போவதா என தன்னுடைய ஈகோவையும் முரட்டுத்தனமாய் காட்டுகிறார் எம்எஸ் பாஸ்கர். தேவையற்ற செலவு செய்யாத சிக்கனக்காரரான பாஸ்கரையோ புது கார் வாங்க வைக்கும் அளவிற்கு அவரைத் தூண்டிவிடுகிறார் ஹரிஷ். வாடகைக்கு வீடு பார்க்கச் செல்லும் போது ஹரிஷ் போன்றும், பாஸ்கர் போன்றும் இல்லாதவர்களாக அமைய வேண்டும் என படம் பார்க்கும் அனைவருமே நினைப்பார்கள்.
ஹரிஷின் காதல் மனைவியாக இந்துஜா. ஹரிஷ் செய்வதில் எது நல்லது, எது தவறானது என வெளிப்படையாக விமர்சிக்கும் ஒரு மனைவியாக இருக்கிறார். பாஸ்கரின் மனைவியாக ரமா, ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்து கணவனைக் கேள்வி கேட்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார்.
சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு முழுவதுமாய் கை கொடுத்திருக்கிறது.
கிளைமாக்ஸ் முன்பான சண்டைக் காட்சிகள் மட்டுமே இப்படத்தின் யதார்த்தத்திலிருந்து கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்கிறது. மற்றபடி குறை சொல்ல முடியாத ஒரு படமாக அமைந்துள்ளது பார்க்கிங்.
Tags: parking, harish kalyan, indhuja, sam cs