கட்டில் - விமர்சனம்

10 Dec 2023

ஈவி கணேஷ்பாபு இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், ஈவி கணேஷ்பாபு, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

காரைக்குடி அருகே ஒரு கிராமத்தின் பிரம்மாண்ட வீட்டுப் பின்னணியில் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பாரம்பரிய கட்டில் பற்றிய கதைதான் இந்தப் படம். தரையில் படுத்துத் தூங்குவதிலும் கட்டில் மீது படுத்துத் தூங்குவதிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கட்டில் ஒன்றாலே குழந்தைகளுக்கும் ஒரு ஆசை உண்டு. அப்படிப்பட்ட கட்டில் ஒன்றை அதன் மீது சிறு வயது முதலே பாசம் கொண்ட ஒருவர் எப்படி காப்பாற்றத் துடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கணேஷ் பாபு வீட்டின் கடைசி பையன். மனைவி சிருஷ்டி டாங்கே, மகன், அம்மா ஆகியோருடன் ஒரு பெரிய வீட்டில் வசித்து வருகிறார். மிகப் பெரிய பழமையான அந்த வீட்டை அவருடைய அண்ணன்கள், அக்கா ஆகியோர் சேர்ந்து விற்றுவிடுகிறார்கள். அந்த வீட்டில் இருந்த கட்டிலை அவர் எப்படியாவது வேறு ஒரு வீட்டிற்கு எடுத்துச் செல்ல நினைக்கிறார். அவரின் அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கணேஷ்பாபு படத்தை இயக்கி மூன்று கால கட்டக் கதாபாத்திரங்களில் தாத்தா, மகன், பேரன் ஆக நடித்திருக்கிறார். பேரன் கதாபாத்திரம்தான் படத்தில் அதிக நேரம் வருகிறது. கட்டில் மீது வைத்துள்ள ஆசையால் அதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என துடிக்கிறார். அந்தத் துடிப்பு அவருடைய நடிப்பிலும் தெரிகிறது.

கணேஷின் மனைவியாக சிருஷ்டி டாங்கே. ஒரு மகனுக்கு அம்மா, இரண்டாவதாகவும் கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்கு முன் பார்த்த படங்களில் இருந்ததை விட இந்தப் படத்தில் சிருஷ்டியின் நடிப்பு இன்னும் சிறப்பாய் இருக்கிறது.

அவர்களின் மகனாக நடித்துள்ள மாஸ்டர் நிதிஷ், கணேஷின் அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம், கணேஷின் கட்டிலைப் பாதுகாக்கும் இந்திரா சௌந்திரராஜன் ஆகியோரும் இயல்பாய் நடித்து கவர்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்துவின் பாடல்கள் இனிமையாய் அமைந்துள்ளன. வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு கதைக் களத்தை கண்ணுக்குள் அழகாய் பதிய வைக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நெகிழ வைக்கும் அளவிற்கு உள்ளது. இடைவேளைக்குப் பின் கொஞ்சம் மெதுவாய் நகர்வதைத் தவிர படத்தில் பெரிய குறைகள் என்று எதுவுமில்லை.

 

Tags: kattil, ev ganesh babu

Share via: