கான்ஜுரிங் கண்ணப்பன் - விமர்சனம்

10 Dec 2023

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சதீஷ், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

பேய்ப் படங்களில் இது ஒரு வித்தியாசமான பேய்ப் படம். அதாவது, கனவில் மட்டுமே வரும் பேய்ப் படம். படத்தின் கதை இயக்குனர் செல்வினுக்கு கனவில்தான் வந்திருக்குமோ என்று கேட்கும் அளவிற்கு அழகாக கற்பனை செய்துள்ளார்.

கேமிங் வீடியோக்களை டிசைன் செய்பவர் சதீஷ். நல்ல வேலைக்காக அலைந்து வருகிறார். ஒரு நாள் அவரது வீட்டின் கிணற்றிலிருந்து ஒரு மந்திர வலை, மந்திர சங்கிலி போன்ற ஒரு பொருளை எடுக்கிறார். அதிலிருந்து ஒரு இறகை எடுத்ததிலிருந்து அவருக்கு பேய் கனவு வருகிறது. அந்த இறகை எடுக்கும் அவரது அம்மா, அப்பா, மாமா, ஒரு டாக்டர், ஒரு ரவுடி ஆகியோரும் கனவு மூலம் அந்த பேய் கனவு வரும் பங்களாவில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த கனவிலிருந்து எப்படி விடுபடுவது என தவிக்கிறார்கள். அதற்கு உதவ வருகிறார்கள் மந்திர, தந்திரம் தெரிந்த நாசர், ரெஜினா. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியாமல் தவித்த சதீஷுக்கு இந்தப் படம் வெற்றியைக் கொடுக்கும். அவர் மற்றும் அவரது அம்மா சரண்யா, அப்பா விடிவி கணேஷ், மாமா நமோ நாராயணன் ஆகியோர் மாறி மாறி சிரிக்க வைக்கிறார்கள். அவர்களது குடும்பமும், வீடுமே வித்தியாசமாக இருக்கிறது. பேய்ப் படம் பார்த்தாலும் ஒரு குடும்பப் படத்தையும் சேர்த்து பார்க்கிறோம் என்ற உணர்வை அது தருகிறது.

சதீஷுக்கு உதவி செய்யும் மந்திரக்காரராக நாசர், மந்திரக்காரியாக ரெஜினா. இருவருமே வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள். சைக்யாட்ரிஸ்ட் டாக்டராக ரெடின் கிங்ஸ்லி, சதீஷுக்கு கடன் கொடுத்து வசூலிக்க வரும் ரவுடி ஆனந்தராஜ் இருவரும் அடிக்கடி கலகலப்பூட்டுகிறார்கள்.

யுவன்ஷங்கர்ராவின் பின்னணி இசை இந்த பேய்ப் படத்திற்கு மாறுதலாக உள்ளது. கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் இருவரும் படத்திற்கான கலையம்சத்தை மேலும் கூட்டியிருக்கிறார்கள்.

சென்டிமென்ட், நகைச்சுவை, கொஞ்சம் பயம் ஆகியவை கலந்த படமாகக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் கூட இறங்கி அடித்திருக்கலாம் என்றுதான் எண்ண வைக்கிறது. இருந்தாலும் இயக்குனரின் முதல் முயற்சி பாராட்ட வைத்துள்ளது.

 

Tags: conjuring kannappan, sathish

Share via: