பைட் கிளப் - விமர்சனம்
15 Dec 2023
அப்பாஸ் எ ரகமத் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய்குமார், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
‘உறியடி’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாமனவர் விஜய்குமார். சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு அதிரடிப் படம் மூலம் களமிறங்கி இருக்கிறார்.
வட சென்னையைத் தாண்டி உள்ள பழவேற்காடு பகுதியை படத்தின் கதைக்களமாக அமைத்திருக்கிறார் இயக்குனர். அங்கு நடக்கும் கஞ்சா கடத்தல், இரண்டு கோஷ்டியின் மோதல், ஒரு கொலை, அதனால் பல வருடங்களாக நடக்கும் சண்டை, அரசியல் பின்னணி என ஒரு படத்திலேயே பல கிளைக்கதைகளைச் சேர்த்து இரண்டரை மணி நேரப் படத்தை ‘புல் டோஸ்’ ஆகக் கொடுத்திருக்கிறார்.
விஜய்குமாருக்கு சிறு வயதிலிருந்தே புட் பால் விளையாட கோச்சிங் கொடுத்தவர் கார்த்திகேயன் சந்தானம். கஞ்சா கடத்துவதை எதிர்த்து சண்டை போட்டதால் அவரை அவரது தம்பி அவினாஷ் மற்றும் சங்கர் தாஸ் இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள். பழியை ஏற்றுக் கொண்டு அவினாஷ் சிறைக்குச் செல்கிறார். சங்கர் தாஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கவுன்சிலர் ஆகிறார். சிறையிலிருநது வருகிறார் அவினாஷ். தன்னை மட்டும் பழி ஏற்றுக் கொள்ள வைத்து சிறைக்குச் செல்ல வைத்த சங்கரைப் பழி வாங்க நினைக்கிறார். அதற்காக விஜய்குமாரை பயன்படுத்தி பழி தீர்க்க நினைக்கிறார். அவினாஷ் வலையில் விஜய்குமார் விழுந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அவினாஷ் - சங்கர் இடையிலான பழி தீர்த்தல் ஒரு பக்கம், விஜய்குமார் மற்றும் சங்கரின் மச்சான் சரவணவேல் இடையிலான மோதல் மற்றொரு பக்கம் என இரண்டு கதைகளும் திரைக்கதையில் இணையாகப் போகிறது. ஒன்று அரசியல் மோதலாகவும், மற்றொன்று அடிதடி மோதலாகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனாலும், அடிதடியின் வேகத்தில் அரசியல் முக்கியத்துவம் குறைந்தது போல உள்ளது. அரசியல் மேலோங்கி இருந்தால் மற்றுமொரு ‘அமைதிப்படை’ பார்த்த திருப்தி ஏற்பட்டிருக்கும்.
அடிதடிக்கு கொஞ்சமும் அஞ்சாத இளைஞனாக விஜய்குமார். எதைப் பற்றியும் யோசிக்காமல் அடிதடியில் இறங்கி நடித்துள்ளார். ஒருவருக்கொருவர் பழி வாங்குவதில் பெரும் லோக்கல் அரசியலை கண்முன் காட்டியிருக்கிறார்கள் அவினாஷ் மற்றும் சங்கர் தாஸ். இருவரும் அதிகம் தெரிந்த முகம் இல்லை என்றாலும் அந்தக் கதாபாத்திரங்களை அப்படி உள் வாங்கி நடித்திருக்கிறார்கள்.
படத்தில் கதாநாயகி எதற்கு என்றுதான் தெரியவில்லை. ஓரிரு காட்சிகளுடன் எங்கே போனார் எனத் தேட வேண்டியிருக்கிறது. விஜய்குமாரை எதிர்க்கும் வில்லனாக சரவணவேல், துடிதுடிப்பாய் நடித்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா பின்னணி இசை, லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு, கிருபாகரன் படத்தொகுப்பு, விக்கி, அம்ரின் அபுபக்கர் சண்டைப் பயிற்சி, ஏழுமலை ஆதிகேசவன் கலை அமைப்பு இயக்குனரின் எண்ணங்களுக்கு சரியான வடிவத்தைக் கொடுத்திருக்கிறது.
அதிகமான சண்டைக் காட்சிகள், போதைப் பொருள் பயன்பாடுகள் படத்தின் தரத்தைக் குறைக்கிறது. இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்திருக்க வேண்டும்.
Tags: fight club