கண்ணகி - விமர்சனம்

16 Dec 2023

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில், ஷான் ரகுமான் இசையமைப்பில், கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

அம்மு அபிராமி கிராமத்தில் பெற்றோருடன் இருப்பவர். இவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருணமான வித்யா பிரதீப்புக்கு அவரது கணவர் வீட்டிலிருந்து விவாகரத்து தரச் சொல்லி வழக்கு தொடுத்துள்ளார்கள். அதை எதிர்க்க கோர்ட் படியேறுகிறார் வித்யா. ஐ.டி.யில் வேலை பார்க்கும் ஷாலின் சோயா, திருமணம் மீது நம்பிக்கையில்லாமல் லிவிங் டு கெதர் ஆக வாழ நினைக்கிறார். உதவி இயக்குனர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பமடைகிறார் கீர்த்தி பாண்டியன். அந்த கர்ப்பத்தைக் கலைக்க அலைகிறார். இந்த நால்வரது வாழ்க்கைப் பயணம்தான் இந்தப் படத்தின் கதை.

நான்கு விதமான பெண் கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் என யதார்த்தமான ஒரு படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். சில யதார்த்தமாகவும், சில அதை மீறியும் படத்தில் பதிவாயுள்ளன.

அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. நால்வருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களுடன் ஒப்பிடும போது கீர்த்திக்கு அதிகக் காட்சிகள் இல்லாமல் இருந்து, படத்தின் கிளைமாக்சில் அவருக்கான அதிக முக்கியத்துவத்துடன் படம் முடிகிறது.

வித்யாவின் வழக்கிற்கு உதவி செய்து காதலனாக மாறும் வக்கீலாக வெற்றி, கீர்த்தி பாண்டியன் காதலனாக யஷ்வந்த் கிஷோர், ஷாலின் சோயா காதலனாக ஆதேஷ் சுதாகர் நடித்திருக்கிறார்கள்.

உணர்வுபூர்வமான கதைக்குள் தங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைப்பாளர் ஷான் ரகுமான்.

படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் பெரும் குழப்பத்தில் முடிகிறது. வித்தியாசமான சிந்தனை என்றாலும் படம் பார்க்கும் ரசிகனுக்கும் புரியும் அளவில் எடுத்திருக்க வேண்டும்.

Tags: kannagi, kannagi review, keerthy pandian, ammu abirami

Share via: