முபாசா : த லயன் கிங் – விமர்சனம்
21 Dec 2024
பாரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வந்துள்ள ஹாலிவுட் திரைப்படம். இப்படத்திற்கு தமிழில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சிங்கம்புலி ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
காட்டில் மிருகங்களின் வாழ்வியலை சொல்லும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் வறண்ட பகுதியில் அப்பா சிங்கம், அம்மா சிங்கம் என வசிக்கும் முபாசா என்ற சிங்கக் குட்டி திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் வேறு ஒரு பகுதிக்கு அடித்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள சிங்கக் கூட்டத்தின் தலைமைச் சிங்கம் முபாசாவை வந்தேறி என சேர்க்க மறுக்கிறது. இருந்தாலும் தலைமை சிங்கத்தின் பெண் ஜோடி முபாசாவை வளர்க்கிறது. வேறொரு சிங்கக் கூட்டம் அந்தப் பகுதிக்கு வந்து சண்டையிட முபாசாவின் வளர்ப்பு அப்பா, அம்மா கூட்டம் இறந்து போகிறார்கள். அங்கிருந்து தப்பிக்கும் முபாசா காட்டின் மற்றொரு பகுதியில் வளமாக இருக்கும் மிலேலே என்ற இடத்தை நோக்கி தனது நண்பன் சிங்கத்துடன் பயணிக்கிறது. அவர்களை சண்டையிட்ட சிங்கக் கூட்டம் மீண்டும் துரத்துகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காடு, மிருகங்கள் பற்றிய படம் என்றாலும், நட்பு, காதல், துரோகம், வந்தேறி, அதிகாரம், சண்டை, உதவி என மனிதர்களுக்கு இடையில் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் மிருகங்கள் மூலம் உணர்த்துகிறார் இயக்குனர்.
குழந்தைகள் ரசித்து மகிழும் விதத்தில் படத்தின் கதை அமைந்துள்ளது. விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் என அனைத்தும் நிஜமானது போலவே இருக்கிறது. காடு, மேடு, மலைகள், மிருகங்கள் என அனைத்தும் அச்சு அசலாக உள்ளது.
தமிழில் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள் அனைவருமே பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவையும் கொஞ்சம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான். மேலும், அடிக்கடி பாடல்கள் வேறு இடம் பெறுகிறது. அவை தமிழில் இடம் பெற்றாலும் படத்திற்கு வேகத் தடையாகவே உள்ளது.
ஒரு சில காட்சிகள் பிரமிப்பாகவும், பல காட்சிகள் சாதாரணமாகவும் இடம் பெற்றுள்ளது. 2019ல் வெளிவந்த ‘த லயன் கிங்’ படம் அளவிற்கு இந்தப் படம் இல்லை என்பது வருத்தமே.
Tags: mufasa the lion king