சூது கவ்வும் 2 – விமர்சனம்

14 Dec 2024

எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, கருணாகரன், கல்கி ராஜா, கவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

2013ல் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படத்தின் இரண்டாம் பாகம் இது. மிர்ச்சி சிவா தலைமையில் கல்கி ராஜா, கவி, அருள்தாஸ் ஆகியோர் சேர்ந்து ஆள் கடத்தி பணம் பறிக்கும் வேலைகளைச் செய்பவர்கள். ஒரு கடத்தலின் போது சிக்கியதில் சிவா மட்டும் சிறைக்குச் சென்று திரும்பி வருகிறார். மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்கும் போது நிதியமைச்சர் கருணாகரன் அவர்களது கடத்தலில் சிக்குகிறார். ஓட்டுக்கு பணம் தர வேண்டிய ‘வங்கி கருவி’ ஒன்று கருணாகரன் வசம் இருக்கிறது. அவர் கடத்தப்பட்டதால் தேர்தலுக்கு பணம் தருவதற்கான சிக்கல் வருகிறது. அதே சமயம் பழைய பகை காரணமா, சிவாவைப் பிடிக்க முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் முயற்சிக்கிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல ஒன்லைன் வசனங்களில் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் மிர்ச்சி சிவா. விஜய் சேதுபதியைப் பார்த்த இடத்தில் சிவாவைப் பார்ப்பது பொருத்தமாக இல்லை தான். எனவே, அவரது கதாபாத்திரத்தைக் கொஞ்சம் காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். சிவாவின் உற்ற நண்பர்களாக கல்கி ராஜா, கவி நடித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் அவ்வப்போது வந்து சேர்ந்து கொள்கிறார் அருள்தாஸ்.

இவர்கள் தவிர படத்தில் நிறைய கதாபாத்திரங்கள். அவர்களில் நிதியமைச்சர் கருணாகரனுக்கு முக்கியத்துவம் அதிகம். கதையின் துருப்புச் சீட்டே அவர்தான். அதை உணர்ந்து நடித்திருக்கிறார். கட்சியின் நிறுவனராக சந்திரசேகர், முதல்வராக ராதாரவி, கருணாகரன் அப்பாவாக எம்எஸ் பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிவாவின் கண்களுக்கு மட்டுமே தெரியும் கற்பனைக் காதலியாக ஹரிஷா.

முதல் பாகப் படத்தில் இருந்த ஒரு சீரியஸ்னஸ் இந்தப் படத்தில் இல்லை. முதல் பாகத்தின் திரைக்கதை ஒரு கட்டுக்கோப்பாக இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் என்னென்னமோ நடக்கிறது. படம் முழுவதும் குடித்துக் கொண்டும், சிகரெட் பிடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். எச்சரிக்கை வாசகங்கள் திரையில் நிரந்தரமாக இருக்கிறது. முதல் பாகத்திலிருந்தே சில விஷயங்களை இதில் ரிபீட் செய்திருந்தால் கூட தெரிந்திருக்காது. முதல் பாகம் முதல் பாகம்தான்.

Tags: soodhu kavvum 2

Share via:

Movies Released On February 05