முடிஞ்சா இவன புடி - விமர்சனம்

14 Aug 2016

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சுதீப், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம். பெரிய ஹீரோக்களுக்கு அவர்களது ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் ஆக்ஷன் படங்களை இயக்குவதில் கே.எஸ்.ரவிக்குமார் திறமையானர். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது. இந்த ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் தலைப்பிலேயே படத்தின் கதையையும் புரிய வைக்கும் விதத்தில் அமைத்திருக்கிறார். சுதீப் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து கொண்டிருப்பவர். நேர்மையாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவர் பெயர் சத்தியம். அதே சமயம் சிவம் என்ற பெயரில் பெரும் பணக்காரர்கள் பதுக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சிவம் யார் என்பதன் ஆதாராம் கிடைக்க அது சத்தியம் என்ற பெயரிலும் இருக்கும் ஒரே ஆள்தான் என காவல் துறை அதிகாரியான சாய் ரவி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் அவரிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டேயிருக்கிறார் சுதீப். சாய் ரவி சத்தியம், சிவம் இருவரும் ஒருவர்தான் என நிரூபீக்கிறாரா ?, சுதீப் எதற்கு கொள்ளையடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ‘நான் ஈ, புலி’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த சுதீப் தமிழில் முதல் முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். நடிப்பைப் பொறுத்தவரையில் அவருடைய திறமை என்ன என்பது ‘நான் ஈ’ படத்தைப் பார்த்த அனைவருக்குமே தெரியும். இந்தப் படத்திலும் சத்தியம், சிவம் என இரு தோற்றத்திலும் தன்னுடைய நடிப்பில் அசத்தியிருக்கிறார். சுதீப்பின் காதலியாக நித்யா மேனன். சத்தியமாக இருக்கும் சுதீப்பின் நேர்மையைக் கண்டு அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், அவர்தான் கொள்ளையடிக்கும் சிவம் என்பது தெரிய வந்ததும் ஒதுங்க ஆரம்பிக்கிறார். கிடைக்கும் காட்சிகளில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிய வைக்கிறார் நித்யா மேனன். முகேஷ் திவாரி, சரத் லோகித்சவா இருவரும் வில்லன்கள், அதிகமான மிரட்டலைக் காட்டாத வில்லன்கள். பிளாஷ்பேக்கில் கொஞ்சமே வந்தாலும் நெகிழ வைக்கிறார் பிரகாஷ்ராஜ். காவல் துறை உயர் அதிகாரியாக நாசர், சுதீப்பின் நேரடி எதிரியாக சாய் ரவி இருவரும் நிறைவு. சதீஷ் இன்னும் எத்தனை படங்களில் நடித்தால் நம்மை சிரிக்க வைப்பார். ‘எப்படியாவது சிரிக்க வைப்பா’ என்று தியேட்டர்களில் கமெண்ட் அடிக்கிறார்கள். இமான் இசையில் பின்னணி இசை ஓகே, பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ராஜரத்தினம் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் அசத்தல். தமிழ்த் திரையுலகத்திற்கு பழக்கப்பட்ட ஒரு கதை என்பது தான் படத்தின் நெகட்டிவ் விஷயமாக அமைந்துவிட்டது. கொஞ்சம் ‘வில்லன்’, கொஞ்சம் ‘ஜென்டில்மேன்’ கலந்த ஒரு கலவையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இன்னும் பல திருப்பங்களைக் கொடுத்து திரைக்கதையில் அதிகமான விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம்.  

Share via: