தர்மதுரை - விமர்சனம்
20 Aug 2016
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வரும் சில திரைப்படங்களைப் பார்க்கும் போது அந்தப் படங்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அப்படி ஒரு நம்பிக்கையை நேற்று கொடுத்த படம்தான் ‘தர்மதுரை’. நட்பு, பாசம், காதல், பிரிவு, நேசம், உதவி என பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு நெகிழ்வான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. ‘யோ..யோ..’ எனச் சொல்லிக் கொண்டுத் திரியும் இளைஞர்கள் ராப் பாடல்களாலும், குத்துப் பாடல்களாலும் தங்களது சினிமா ரசனையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக அந்தப் பக்கத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கிறது. ஆனால், கலாச்சாரத்தை மதிக்கத் தெரிந்த, அந்தந்த மண் சார்ந்த உணர்வுகளைச் சொல்லும் படங்கள்தான் ஒரு நாட்டின், ஒரு மொழியின், ஒரு இனத்தின் அடையாளம் என உலக சினிமாக்கள் சொல்கின்றன. உலக சினிமாவைப் பற்றிப் பேசும் ரசிகனைக் கூட நம் மண் சார்ந்த சினிமாவைக் கொடுத்து ரசிக்க வைக்காமல் வேறு பக்கம் சிலர் அழைத்துச் செல்வது எந்த விதத்தில் நியாயம். நல்ல வேளை சீனு ராமசாமி போன்ற ஒரு சில இயக்குனர்கள் இருப்பதால்தான் சினிமாவிலும் நமது அடையாளம் காப்பாற்றப்பட்டு வருகிறது. அதற்காகவே ஒரு தனி வணக்கம் சீனுவுக்கு. அம்மா ராதிகா, அண்ணன் அருள்தாஸ், இரண்டு தம்பிகள், அக்கா என ஒரு கிராமத்துக் குடும்பத்தில் இருந்து டாக்டருக்குப் படிக்கிறார் விஜய் சேதுபதி. பயிற்சி மருத்துவராக ஒரு கிராமத்தில் இருப்பவருக்கு அங்கு மற்றவர்கள் மீதும் அக்கறை செலுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் பிடித்துப் போகிறது. குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பெண் கேட்கச் செல்கிறார். அனைத்தும் நல்ல விதமாகவே நடக்கிறது. ஆனால், பணத்தாசை பிடித்த அண்ணன், தம்பிகளால் அந்தத் திருமணம் ‘வரதட்சணை’ என்ற பெயரால் தடைபட ஐஸ்வர்யா மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். தடுமாறிப் போகும் விஜய் சேதுபதி குடிகாரனாக மாறுகிறார். அண்ணனும் தம்பிகளும் விஜய் சேதுபதியை ‘கொலை’ செய்ய முயற்சிக்க அம்மா ராதிகா, மகனைத் தப்பிக்க விடுகிறார். அதன்பின் விஜய் சேதுபதி எங்கு செல்கிறார், என்ன ஆனார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விஜய் சேதுபதிக்காக ‘தர்மதுரை’ கதாபாத்திரத்தை சீனு எழுதினாரா அல்லது ‘தர்மதுரை’ கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தமாக விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டாரா என வியக்க வைக்கிறது விஜய் சேதுபதியின் நடிப்பு. ஒரு இயல்பான கிராமத்து இளைஞரை கண்முன் நிறுத்துகிறார் விஜய். தமிழ் சினிமா இன்னும் பல காலத்திற்கு விஜய் சேதுபதி என்ற இயல்பான நடிகரைப் பற்றிப் பாராட்டிக் கொண்டேயிருக்கும். விஜய் தயவு செய்து நீங்களும் ஆக்ஷன், அடிதடி என அந்தப் பக்கம் போய்விடாதீர்கள். நல்ல தமிழ் சினிமா எடுக்க நினைக்கும் இயக்குனர்களின் மனங்களில் பல்வேறு கதாபாத்திரங்களாக தற்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். விரைவில் அவற்றிற்கான களம் அமையும், அவர்களையும் வாழ வையுங்கள். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்காகவே தமன்னாவுக்கு தனி பாராட்டுக்கள். நாலு டூயட், நாலு காதல் காட்சிகள் என வழக்கமான கதாபாத்திரத்திலிருந்து விலகிய சுபாஷினி கதாபாத்திரத்தை ஒரு ஹிந்திப் பெண்ணாக இருந்து கொண்டு உள்வாங்கி நடித்ததற்காக ஒரு சூப்பர் பாராட்டு. ஒரு காட்சியில் கூட கிளாமரைக் காட்டாத ஒரு நாயகியை இந்தக் காலத்திலும் பார்ப்பது அரிது. அப்படி ஒரு பாந்தமான கதாபாத்திரமாக சுபாஷினி கதாபாத்திரமும் அதில் தமன்னாவின் நடிப்பும் அமைந்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய ஷோபா, ஐஸ்வர்யா ராஜேஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய ஈடுபாட்டையும், இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி விடுகிறார். ‘அன்புச் செல்வி’ கதாபாத்திரம் இன்னும் பல ஆண்டுகள் ஐஸ்வர்யாவின் புகழைப் பாடும். சிருஷ்டி டாங்கே கொஞ்சமாக வந்தாலும் நிறைவு. அவருடைய கதாபாத்திரத்தின் முடிவு மட்டும் பெரும் ஏமாற்றம். ராதிகா சரத்குமாரின் ‘பாண்டியம்மாள்’ கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. நடையில், பேச்சில், செயலில் அவ்வளவு ஒரு நிதானம். மகன் மீது வைத்துள்ள பாசத்தைக் காட்டுவதில் அவரின் தாய்ப் பாசத்திற்கு நிகர் வேறில்லை. அருள்தாஸ், செளந்தர்ராஜா, ராஜேஷ், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோரின் கதாபாத்திரங்களும் அவ்வளவு இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அக்கா பெண்ணாக வரும் அந்தச் சிறுமி கூட அவ்வளவு அழகாக நடித்திருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணியில் பாடல்களில் அவ்வளவு கிராமிய வாசம். பின்னணி இசையில் இன்றைய இசையமைப்பாளர்களில் தன்னை தனி அடையாளமாகக் காட்டியுள்ளார் யுவன். சுகுமாரின் ஒளிப்பதிவில் மலையும், அந்த மலை சார்ந்த கிராமமும் அவ்வளவு அழகு. படத்திற்கு தனி அழகைக் கொடுத்திருக்கின்றன. ஆங்காங்கே, கிராமத்து மருத்துவ சேவை, பரோட்டா உணவுக்கு எதிர்ப்பு, அணையின் பக்கத்தில் வறண்ட பூமி என கவன ஈர்ப்பு விவகாரங்களையும் சேர்த்திருக்கிறார் இயக்குனர்.