மிடில் கிளாஸ் - விமர்சனம்

21 Nov 2025
'மிடில் கிளாஸ்' , நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் திரைப்படம். இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்கிய இப்படத்தில், பொருளாதார இடர்களால் சிக்கித் தவிக்கும் ஒரு தம்பதியின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு, அதை இழக்கும் அஜாக்கிரதை ஆகியவை வழியாக சமூக அறம், மனிதநேயம் மற்றும் பகிர்தல் போன்ற கருத்துகளை எளிமையாக விவரிக்கிறது. முனீஷ்காந்த், விஜயலட்சுமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், நடுத்தரக் குடும்பங்களின் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நடுத்தரக் குடும்பங்களில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குப் பொருளாதாரப் பற்றாக்குறையே முதன்மைக் காரணம். பணம் இருந்தால் அத்தகைய குடும்பங்களின் அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடலாம். அத்தகைய நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் முனீஷ்காந்த் - விஜயலட்சுமி தம்பதிக்கு, தங்களது பொருளாதார இடர்களிலிருந்து மீள ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அஜாக்கிரதையால் முனீஷ்காந்த் அந்த வாய்ப்பை இழந்துவிடுகிறார். இதனால் குடும்பத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. இழந்த வாய்ப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதை, ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையாகவும் சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சித்தரிப்பதே 'மிடில் கிளாஸ்' படத்தின் சாரம்.

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரபலமான முனீஷ்காந்த், இங்கு கதாநாயகனாக நடித்திருந்தாலும், புதிய முயற்சிகள் ஏதுமின்றி தனது வழக்கமான நடிப்பு ஸ்டைலைக் கொண்டு கதாபாத்திரத்துக்கு முழு நியாயம் செய்திருக்கிறார். அவரது இயல்பான உணர்வுகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.

கதாநாயகியாக முனீஷ்காந்தின் மனைவியாக வரும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்பப் பெண்களின் மனநிலையை அழகாகப் பிரதிபலிக்கிறார். இருப்பினும், சில காட்சிகளில் கொஞ்சம் அதிகப்படியான நடிப்பு எதார்த்தத்திலிருந்து விலகச் செய்கிறது.

காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி முதலாளியாக வரும் நடிகர் உள்ளிட்டோர், அறம் மற்றும் மனிதநேயத்தைப் போற்றும் கதாபாத்திரங்களாக வலம் வந்து, பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் பிரனவ் முனிராஜின் பாடல்கள் கதையின் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் சேர்த்து, உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா, நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை எந்தக் கலப்படமும் இன்றி நம் கண்முன் கொண்டு வருகிறது. இயல்பான ஒளியமைப்பு படத்துக்கு கூடுதல் யதார்த்தத்தைச் சேர்க்கிறது.

குடும்ப நாடக வகையிலான கதையானாலும், அதை விறுவிறுப்பாக நகர்த்தும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், சில இடங்களில் 'அடுத்து என்ன?' என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி, பார்வையாளர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறார்.

எழுத்து மற்றும் இயக்கத்தில் கிஷோர் முத்துராமலிங்கம், நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசக் கருத்துகளைப் பேசியிருக்கிறார். தேவைக்கு அதிகமான செல்வத்தைப் பகிர்ந்து வாழ்வதே உண்மையான நிறைவு எனும் கருத்தை குறியீடுகள் வழியாக அழுத்தமாகப் பதிவு செய்து, எளிய முறையில் அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார்.

எளிமையான கதை மற்றும் யூகிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், திரைமொழியில் சுவாரஸ்யம் சேர்த்து, அறம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் கதாபாத்திரங்கள் மூலம் நேர்மறைச் சிந்தனையை விதைக்கிறார் இயக்குநர்.

ஒரு சாதாரண பொருளைக் கூட பத்திரமாகக் கையாளும் நடுத்தரக் குடும்பங்களின் மனநிலையை கதைக்கரு விலகியிருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக படம் நடுத்தர வகுப்பினரின் வாழ்க்கையைத் தொட்டுச் சென்று சிந்தனையைத் தூண்டுகிறது.

Tags: middle class, munishkanth, vijayalakshmi agathiyan

Share via: