மனிதன் தெய்வமாகலாம் - விமர்சனம்
10 Apr 2026
ஒரு மனிதன் தெய்வமாவது எப்போது? அவன் அற்புதங்கள் செய்யும்போது அல்ல — அவன் அடுத்தவர் வலியை தன் வலியாக உணர்ந்து செயல்படும்போது. அந்த உண்மையை, சாலை கூட இல்லாத ஒரு சிறு மலைக்கிராமத்தின் பின்னணியில், எளிமையான மனிதர்களின் கதையாக சொல்லியிருக்கிறது — 'மனிதன் தெய்வமாகலாம்'.
சாலை வசதியற்ற மலைக்கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து வாழும் செல்வராகவனுக்கும், குஷி ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. தன்னை காதலித்து மணந்த மனைவிக்கு நல்வாழ்வு தர வேண்டும் என்ற ஒரே ஆசையில், பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை ஓரத்தில் சிறிய உணவகம் தொடங்குகிறார். உலகிலேயே இப்படியொரு தம்பதி இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.
மனைவியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை அறிந்துகொள்ளும் செல்வராகவன், அதற்கு பதிலடியாக மேற்கொள்ளும் நடவடிக்கை அவரை அந்த கிராம மக்களின் கண்களில் தெய்வமாக உயர்த்துகிறது. அந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை, சாமான்ய மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களை சமூகப் பொறுப்புடன் படம் பிடித்துக் காட்டுவதே இந்த படத்தின் மையக்கரு.
மிகவும் அடக்கமான கதாபாத்திரத்தில் உயிர் ஊதியிருக்கும் செல்வராகவன், தன் இயல்பான குணத்தை நடிப்பிலும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். மனைவி மீதான தூய அன்பு, அவருக்கு நேர்ந்த அநீதியை நினைத்து கலங்குவது, பின்னர் எடுக்கும் தீரமான முடிவு என படத்தின் உணர்வுப் பயணத்தை தோளில் சுமந்து நடந்திருக்கிறார். எனினும், சில காட்சிகளில் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதும், எப்போதும் அமைதியாக இருக்கும் கதாபாத்திரம் சில இடங்களில் பேசவே திணறுவதும் சற்று அலட்சியமாக தோன்றுகிறது.
நாயகியாக அறிமுகமாகியிருக்கும் குஷி ரவி, அழகில் மட்டுமல்ல நடிப்திலும் தன்னை நிறுவிக்கொள்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு மனதை தொடுகிறது.
செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கௌசல்யா, வேடம் சிறியதாக இருந்தாலும் தன் இடத்தை நிரப்பியிருக்கிறார். அவரின் கணவராக நடித்த ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான நுட்பங்களை தன் நடிப்பில் வெளிப்படுத்தி கவனிக்கத்தக்க தடம் பதிக்கிறார்.
கந்துவட்டிக்காரராக வலம் வரும் மைம் கோபி, பார்வையாளர்களின் நெஞ்சில் வெறுப்பை விதைக்கும் விதத்தில் தன் கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அமைச்சர் வேடத்தில் தோன்றும் ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும், வழக்கம்போல் இயல்பற்ற நடிப்பால் ஏமாற்றுகிறார்.
சிறுமி லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட பல புதுமுகங்கள், அந்த மண்ணின் மக்களாக மிகவும் உண்மையாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் இயல்பான தோற்றமும் பேச்சும் திரையில் ஒரு நேர்மையான சித்தரிப்பை கொண்டு வந்திருக்கிறது.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, இன்றும் சாலை இல்லாமல் தவிக்கும் கிராமங்களின் கசப்பான நிதர்சனத்தையும், அங்கு வாழும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையையும் நம் கண்முன் நேரடியாக நிறுத்துகிறது.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் பாடல்கள் அனைத்தும் இதயத்தில் தங்குகின்றன. பின்னணி இசையோ கதாபாத்திரங்களின் வலியையும் தவிப்பையும் பார்வையாளர் மனதில் நேரடியாக கொண்டுபோய் சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் தீபக்.எஸ், விறுவிறுப்பை விட உணர்வுகளை ஆழமாக பதிய வைப்பதே இந்த கதைக்கு தேவை என்பதை உணர்ந்து, காட்சிகளை நிதானமான தாளத்தில் கோர்த்திருக்கிறார். அந்த தேர்வு படத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்களின் நெருக்கடிகளையும், கந்துவட்டி கொடுமையால் உடைந்து போகும் பெண்களின் அவலத்தையும் திரைக்கதையில் மிக நேர்மையாக பதிவு செய்திருக்கிறார்.
கதை மெதுவாக நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர் இதயத்தில் வேரூன்ற வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் எப்படி படிப்படியாக மாறி மற்றவர்களுக்கு புகலிடமாகிறான் என்ற இந்த உணர்வுப்பூர்வமான பயணம், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தக்க விலை கொடுக்கும் நியாயமான முடிவோடு நிறைவடைகிறது.
எளிய மனிதர்களின் கனவுகளையும் கண்ணீரையும் உண்மைக்கு நெருக்கமாக படம் பிடித்திருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அந்த மனிதர்களுக்கு நேரும் அநீதியை திரையில் உணர்வாக கொண்டுவந்து பார்வையாளரை உலுக்கியிருக்கிறார். 'மனிதன் தெய்வமாகலாம்' — இது வெறும் படத்தின் தலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லப்படும் ஒரு நம்பிக்கையான அழைப்பு.
Tags: manidhan deivamagalam, selvaraghavan

