லவ் இன்சூரன்ஸ் கம்பெனி - விமர்சனம்
11 Apr 2026
காதலை தொழில்நுட்பம் கொண்டு அளவிட முடியுமா? உணர்வுகளை ஒரு செயலி புரிந்துக்கொள்ள முடியுமா? இந்த கேள்விகளை மையமாக வைத்து, எதிர்காலத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்ல முற்படுகிறது இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.' கலர்புல்லான காட்சியமைப்புகளும், பிரதீப் ரங்கநாதனின் இதயம் தொடும் நடிப்பும் இணைந்து உருவான இந்த படம் — தொழில்நுட்பத்திற்கும் மனித உணர்வுக்கும் இடையிலான போரை திரையில் கொண்டு வருகிறது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, தாம்பத்திய வாழ்வில் சந்தித்த தோல்வியால் பாதிக்கப்பட்டு, இனி எந்த காதலரும் இத்தகைய வலியை அனுபவிக்கக் கூடாது என்ற உறுதியுடன், நீண்ட உழைப்பிற்குப் பிறகு 2040-ல் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என்ற செயலியை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொருத்தமான துணையை தேர்வு செய்வது மட்டுமின்றி, காதலர்கள் ஒருவரையொருவர் 24 மணி நேரமும் கண்காணித்துக்கொள்ளவும் முடியும். யாராவது ஏமாற்றினால் உடனே தெரிந்துவிடும்; பிரிய நினைத்தால் இழப்பீடு வழங்கி அதையும் நிறைவேற்றும் — இதுவே LIK-இன் தனித்துவம். காதலர்கள் மட்டுமின்றி தம்பதிகளிடமும் பரவலான வரவேற்பைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கும் இந்த செயலியின் ஒரு வாடிக்கையாளரான நாயகி கிரித்தி ஷெட்டி, சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் உலகில் வளர்ந்தவர்; சமூக வலைதளங்களில் தன் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் ஆசையில் தொடர்ந்து மூழ்கியிருக்கிறார்.
மறுபுறம், தொழில்நுட்பத்தின் கெடுதல்களை உணர்ந்த சீமான், 'பசுமை உலகம்' என்ற கைபேசிகள் இல்லாத மாற்று சூழலை உருவாக்கி நடத்தி வருகிறார். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன், தந்தையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப கைபேசியே தொடாத இளைஞனாக வாழ்ந்து வருகிறார்.
கிரித்தி ஷெட்டியை கண்ட கணத்திலேயே காதல் கொள்ளும் பிரதீப், அவளுக்காக தந்தைக்கு தெரியாமல் கைபேசி வாங்கி, LIK செயலியில் இணைந்து அவளுடன் நட்பை வளர்க்கிறான். நட்பு காதலாக மலரும் தருவாயில், அதே செயலி வழங்கிய தவறான தகவலால் கிரித்தி காதலை துண்டித்துக் கொண்டு பிரிந்து விடுகிறாள்.
கடுங்கோபம் கொண்ட பிரதீப், தன் இதயத்தில் உயிர்ப்புடன் கொண்டிருக்கும் காதலை இயந்திரத்தனமான தகவல்களால் அளவிட்ட LIK செயலி போலியானது என்பதை நிரூபிக்க உறுதி பூண்டான். இதை எதிர்த்து நிற்கும் எஸ்.ஜெ.சூர்யா, 30 நாட்களுக்குள் கிரித்தியை மீண்டும் காதலிக்க வைத்தால் செயலி தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும், இல்லையெனில் LIK சிறந்தது என்று பிரதீப் உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுகிறார். அந்த சவாலில் பிரதீப் வெற்றி பெற்றானா? தொழில்நுட்பத்தின் தர்க்கத்திற்கும் மனித காதலின் ஆழத்திற்கும் இடையே நடக்கும் இந்த யுத்தத்தின் முடிவே 'LIK'-இன் மையக்கரு.
பிரதீப் ரங்கநாதன் தனக்கே உரிய இயல்பான எளிமையான பாத்திரத்தை, தன் தனித்துவமான மேனரிசத்தால் வலுப்படுத்தியிருக்கிறார். காதலை நகைச்சுவையாக வெளிக்காட்டும் காட்சிகளில் கூட, அவரது கண்களில் உறையும் உணர்வு பார்வையாளர்களை உள்ளே இழுக்கிறது. பிரிவின் வலியிலும், மீண்டெழும் நம்பிக்கையிலும் சமனான ஆழத்துடன் நடித்து, ரசிகர்களை கொண்டாட வைக்கிறார்.
நாயகியாக கிரித்தி ஷெட்டி, அலங்கரிக்கப்பட்ட தோற்றத்தில் வலம் வந்தாலும் அது அவருக்கு நன்கு பொருந்துகிறது. சமூக வலைதள மோகமும், தாய் பாசத்திற்கான ஆழமான ஏக்கமும் அவரது கண்களில் அப்பட்டமாக தெரிகிறது. நடிப்பிலும் தனது கடமையை குறையின்றி நிறைவேற்றியிருக்கிறார்.
எஸ்.ஜெ.சூர்யா, மனித காதலுக்கு எதிரான நவீன வில்லனாக திரையில் நிறைகிறார். தன் வழக்கமான ஆவேசமான பாணியை அளவோடு கையாண்டு, கதாபாத்திரத்தின் தேவைக்கு மட்டுமே நடிப்பை சுருக்கியிருக்கிறார் — இது படத்திற்கு நிச்சயம் பலம் சேர்க்கிறது. செயலியை காப்பாற்றும் முயற்சியிலும், வெற்றியை கொண்டாடும் துள்ளலிலும் கலகலப்பை கொண்டு வருகிறார்.
சீமான், அப்பா பாத்திரத்தில் செயற்கையின்றி இயல்பாக நடித்து மனதை தொடுகிறார். அவர் வழங்கும் அறிவுரைகள் வெறும் வசனங்களாக ஒலிக்காமல், மனித மகிமையை காப்பாற்றுவதற்கான ஆழமான கருத்துகளாக உள்ளே இறங்குகின்றன.
யோகி பாபு தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருந்தாலும், நடிப்பு மற்றும் நகைச்சுவை அணுகுமுறையில் முன்பு போலவே நகர்கிறார். கெளரி கிஷன் மாறுபட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறார், ஆனால் தாக்கம் செலுத்தும் பாத்திரம் கிட்டவில்லை. நண்பன் பாத்திரத்தில் ஷாரா தன் வேலையை தக்கதாக செய்திருக்கிறார். மாளவிகா, ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் தங்கள் இடங்களில் திறம்பட தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை திரையில் நிறைவாக பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்து, எதிர்காலத்தின் நேர்த்தியான தோற்றத்தை உயிர்ப்புடன் கொண்டு வருகிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருந்தாலும், கேட்டு முடித்தவுடன் மனதில் தங்காமல் போய்விடுகின்றன. பின்னணி இசை படத்தின் வண்ணமயமான சூழலுக்கு பொருந்துகிறது என்றாலும், நினைவில் தங்க மறுக்கிறது.
கலை இயக்குநர் கண்னன்.எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் தங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் குழுவினர், எதிர்காலத்தின் தோற்றத்தை திரையில் சிறப்பாக உயிர்ப்பித்திருக்கிறார்கள் — அது பார்வையாளர்களுக்கு மாயாஜால உணர்வை தருகிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், படத்தின் தொழில்நுட்ப கருத்துகளை பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் திறமையாக தொகுத்திருக்கிறார்.
விக்னேஷ் சிவன், 'எதை கேட்டாலும் கொடுக்கும் தொழில்நுட்பம், உண்மையான காதலை கொடுக்குமா?' என்ற கேள்வியை வெறும் வணிக படமாக மட்டுமில்லாமல், உணர்வுபூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார். அந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றாலும், திரைக்கதையில் சில இடங்களில் கதை ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது சோர்வூட்டுகிறது. காட்சியழகில் அதிகமான கவனம் செலுத்தி, கதை கட்டுமானத்தில் சிறு கோட்டை நேர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த படத்தின் மையக்கரு ஏற்கனவே தமிழில் வெளியான ஒரு வலை தொடரை நினைவூட்டுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் மாற்றம் பெற்றாலும், 'ஆதார கருத்து எங்கிருந்து வந்தது?' என்ற கேள்வி மனதில் தொங்குகிறது.
ஆனால், படத்தின் அனைத்து குறைகளையும் தன் தோளில் சுமந்து கொண்டு, ஒவ்வொரு காட்சியிலும் புத்துணர்ச்சியை கொட்டுவது பிரதீப் ரங்கநாதன் மட்டுமே. அவர் இல்லாவிட்டால் இந்த படம் உப்பில்லாத சமையலாகி இருக்கும் — இது மிகையில்லாத உண்மை.
Tags: lik, love insurance kompany, pradeep ranganathan, sj surya, krithi shetty

