காக்கி சர்க்கஸ் — விமர்சனம்

10 Apr 2026

சிறைச்சாலை என்பது வெறும் தண்டனை தரும் இடமல்ல, திருத்தம் செய்யும் தளம் என்ற நம்பிக்கையில் ஒரு கதை பிறக்கிறது. அந்த கதை நகைச்சுவையாக தொடங்கி, சிந்தனையை தூண்டும் வகையில் முடிகிறது. திரைத்தளத்தில் புதிய சுவாரஸ்யத்தை கொண்டு வந்திருக்கும் இந்த வலைத்தொடர் தான் — 'காக்கி சர்க்கஸ்'.

துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றும் முனீஷ்காந்த், குற்றவாளிகளை திருத்துவதே சிறைச்சாலையின் உண்மையான நோக்கம் என்று உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக சிறைக்குள் ஒரு சிறிய நூலகம் அமைத்து, கைதிகளிடம் புத்தகங்களை படிக்கத் தருவார். குற்ற சம்பவங்களுக்கான விடைகளை கூட புத்தகங்களிலேயே தேடுவது அவரின் வழக்கம். அவருடன் காவலராக உழைக்கிறார் சுபாஷ் செல்வம்.

இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியல் திருடப்படுகிறது. இச்சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பே பணத்தை திரும்ப வைத்தாக வேண்டிய நெருக்கடிக்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படுகிறார். வேறு வழியின்றி வங்கியில் கடன் வாங்கி, அந்த பணத்தை உண்டியலில் போட முடிவெடுக்கிறார். ஆனால் விதி வேறு விதமாக சிந்திக்கிறது — கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருக்க, அங்கும் திருடன் கைவரிசை காட்டிவிடுகிறான்.

இரட்டை நஷ்டத்தில் சிக்கிய சுபாஷ் செல்வம், திருடன் யார் என்பதை கண்டறிந்தும் அவனை சட்டப்படி பிடிக்க இயலாத இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்கிறார். ஆதாரத்துடன் திருடனை அம்பலப்படுத்தி, பணத்தை மீட்க சுபாஷ் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களும் நகைச்சுவையும் தான் இந்த 'காக்கி சர்க்கஸ்'.

சிறை கண்காணிப்பாளர் முனீஷ்காந்த், காவலர் சுபாஷ் செல்வம், திருடன் ராஜேஷ் மாதவன் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடுவே, கோவில் உண்டியல் ஒரு தனி கதாபாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு 'கதாபாத்திரங்களை' மையமாக வைத்து, கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் சுவாரஸ்யமும் கலந்த விறுவிறுப்பான பயணத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிப்.

நாயகர்களாக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் சுபாஷ் செல்வம் இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நூற்றுக்கு நூறு நீதி வழங்கியிருக்கிறார்கள்.

முனீஷ்காந்த், தான் பழகிய வழக்கமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை பாணியை ஒதுக்கி, கதாபாத்திரம் கோரும் உணர்வுகளை மட்டும் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இது கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்திருப்பதோடு, ஒரு நடிகராக தன்னை புதிய பரிமாணத்தில் நிறுவியிருக்கிறது.

காவலர் வேடத்தில் அரங்கேறியிருக்கும் சுபாஷ் செல்வம், நகைச்சுவை கலந்த நடிப்பு என்றாலும், சில காட்சிகளில் வெளிப்படும் ஆக்‌ஷன் வேகம் பார்வையாளரை திடுக்கிட வைக்கும். திருடனை வேட்டையாடும் காட்சிகள் நகைச்சுவையாக தொடங்கினாலும், சுபாஷின் ஆத்திரமும் படபடப்பும் அதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் அனுபவமாக மாற்றிவிடுகின்றன.

திருட்டு வேடத்தில் வலம் வரும் ராஜேஷ் மாதவன், மிக சாதாரணமான தோற்றத்தில் வந்தாலும், பணத்திற்காக அல்ல — பெயருக்காக திருடுவேன் என்ற அவரின் தனித்த குணாதிசயம் தொடரின் வேகத்தை அதிகரிக்கிறது.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் கௌதமி தங்கள் பங்களிப்பை திறம்படவே நிறைவேற்றியிருக்கிறார்கள். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவியின் படப்பிடிப்பும், இசையமைப்பாளர்களான சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசையும், தொகுப்பாளர் அர்ஜுன் பாபுவின் கத்தரிக்கோல் வேலையும் ஒன்றிணைந்து, தொடரை மேலும் உயர்த்தி பார்வையாளரை கதைக்குள் ஆழமாக இழுத்துச் செல்கிறது.

எளிமையான ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதை பல கிளைக்கதைகளால் செழுமைப்படுத்தியிருக்கும் இயக்குநர் அமீன் பாரிப், உண்டியலையே ஒரு உயிரோட்டமான கதாபாத்திரமாக கையாண்டிருப்பது படைப்பாற்றலின் அடையாளம். சிறைச்சாலைக்குள் திருட்டு எப்படி நடக்கும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி, திருடன் எப்போது, எப்படி சிக்குவான் என்ற கேள்வியை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உயிரோடு வைத்திருக்கிறார்.

புத்தகம் படிப்பதன் அவசியத்தை நுட்பமாக வலியுறுத்தும் அதே வேளையில், புத்தகத்தில் மட்டுமே வாழ்க்கையை தேட முடியாது, சில நேரங்களில் எதார்த்தத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்ற தத்துவத்தை நகைச்சுவையாக பரிமாறி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

முதல் நான்கு அத்தியாயங்கள் லேசான நகைச்சுவையுடன் சறுக்கினாலும், தொடரின் பிற்பகுதி பரபரப்பான திருப்பங்களோடு வேகம் பிடிக்கிறது. ஒட்டுமொத்தத்தில், 'காக்கி சர்க்கஸ்' குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய, புன்னகையோடு யோசிக்க வைக்கும் ஒரு நேர்மையான இளையத் தொடர்.

Tags: kakee circus

Share via: