மகாசேனா - விமர்சனம்
13 Dec 2025
காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ஆன்மீக நம்பிக்கைகள், கோயில் சிலை கடத்தல் சதி ஆகியவற்றை மையப்படுத்திய கதையமைப்புடன் வெளிவந்திருக்கும் படம் 'மகாசேனா'.
'காந்தாரா' போன்ற படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தலைப்பு மற்றும் கதைக்களத்தால் ஆரம்பத்தில் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால், திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் படத்தை முழுமையாக ரசிக்க விடாமல் தடுக்கின்றன. பழங்குடி இளைஞனாக நாயகனாக நடித்திருக்கும் விமல், சேனா என்ற யானையை வளர்த்து வருகிறார். அவரது மலைக்கிராம கோயிலில் உள்ள யாளிஷ்வரன் சிலையை, வனத்துறை அதிகாரியான ஜான் விஜய் திருட திட்டமிடுகிறார். இதற்கு உடந்தையாக மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடி குழுவினரை பயன்படுத்துகிறார். இடையில், மதம் பிடித்த சேனா யானை விமலின் மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் ஓடிவிட, யானையை தேடிச் செல்லும் விமல் சிலை கடத்தல் சதியில் சிக்குகிறாரா? யானை என்ன ஆகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக வரும் விமல், கதையின் மையப்புள்ளியாக இருந்தாலும், பல காட்சிகளில் வெறும் கதாபாத்திரமாகவே தோன்றுகிறார். பழங்குடி வாழ்க்கைக்கு ஏற்ற உடல்மொழியோ, உணர்வுப்பூர்வமான நடிப்போ இல்லாமல், வழக்கமான ஏனோ தானோ நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வலிமையான பெண் கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் சற்று தயங்கியதுபோல் தெரிகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. வில்லத்தனமான வனத்துறை அதிகாரியாக ஜான் விஜய், அதீத கோமாளித்தனத்துடன் நடித்திருக்கிறார். மறுபக்கம், வில்லனாக வரும் கபீர் துஹான் சிங், கங்கா ரோலில் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் விஜய் சேயோன், பேராசிரியராக அல்ஃப்ரெட் ஜோஸ், காளி ரோலில் சிவகிருஷ்ணா, மாணவியாக சுபாங்கி ஜா, விமலின் மகளாக சிறுமி இலக்கியா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்திருக்கின்றனர். தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு டி.ஆர். காட்டுப் பகுதிகளையும், மலைப்பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் பொருட்செலவு திரையில் தெரியும் வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். இசையமைப்பாளர் ஏ. பிரவீன் குமாரின் பாடல்கள் சுமாராக இருந்தாலும், உதய் பிரகாஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது. ஆனால், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மூன்று வெவ்வேறு கோணங்களிலான கதைகளை (கிராமம், கல்லூரி மாணவர்கள், மாஃபியா) ஒன்றிணைக்க முயன்ற போது பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன், சொல்ல வந்த செய்தியை தெளிவாக வெளிப்படுத்த தவறியதுடன், கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சரிவர கையாண்டிருக்க முடியவில்லை. மொத்தத்தில், காடு, ஆன்மீகம், பழங்குடி வாழ்க்கை என அழகான கான்செப்ட்டுடன் வந்த 'மகாசேனா', திரைக்கதை பலவீனத்தால் பார்வையாளர்களை முழுமையாக கவர தவறிவிட்டது. விஷுவல் அழகுக்காக ஒருமுறை பார்க்கலாம், ஆனால் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Tags: mahasena, vimal

