மாண்புமிகு பறை - விமர்சனம்
13 Dec 2025
தமிழர்களின் ஆதி இசைக்கருவியான பறையின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் இரு நண்பர்களின் கதையைச் சொல்லும் படம் 'மாண்புமிகு பறை'.
அழிந்து வரும் பறை இசையைப் பாதுகாத்து, அதை மரியாதைக்குரிய கலையாக உயர்த்தும் போராட்டம், சமூகத்தில் அதை வாசிப்பவர்கள் எதிர்கொள்ளும் இழிவு ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இத்திரைப்படம், கேன்ஸ் திரைவிழா உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பாராட்டு பெற்று கவனம் ஈர்த்தது. ஆனால், திரையரங்க அனுபவத்தில் திரைக்கதை பலவீனங்கள் தாக்கத்தை குறைத்துவிடுகின்றன.
லியோ சிவகுமாரும், ஆரியனும் 'ஆதிபறை' என்ற இசைக் குழுவை நடத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள், கோயில் திருவிழாக்கள் மட்டுமின்றி, பறையை உலகளாவிய இசையாக உயர்த்தி, அதை வாசிப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்யும் முன்னெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூகத்தில் சிலரிடம் இருந்து எதிர்ப்பு வர, அதை எதிர்கொண்டு அவர்கள் வென்றார்களா? என்பதே கதை.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார், வெற்றி என்ற கதாபாத்திரத்தில் தோன்றினாலும், பறை வாசிக்கும் கலைஞரின் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். பறை அடிக்கும் காட்சிகளில் உடல்மொழியும், உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாதது கதாபாத்திரத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.
நண்பர் கதாபாத்திரத்தில் ஆரியன், உணர்வுப்பூர்வமான வசனங்களையும் நடனத்தையும் வெளிப்படுத்தியிருந்தாலும், பறை கலைஞரின் ஆழத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய முடியவில்லை.
நாயகியாக காயத்ரி ரெமா, உணர்ச்சிபூர்வமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வேடங்களை திறம்பட செய்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் தேவாவின் பாடல்கள் ஆற்றல் மிக்கவையாக, கேட்க ரசிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், பறை இசையின் ஆழமான தாக்கத்தை முழுமையாக உணர்த்தவில்லை. பின்னணி இசை சுமார்.
ஒளிப்பதிவாளர் ஆர். கொளஞ்சி குமார், கிராமிய சூழலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சி.எஸ். பிரேம்குமாரின் தொகுப்பு காட்சிகளை வரிசைப்படுத்தியிருந்தாலும், சுவாரஸ்யத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எஸ். விஜய் சுகுமார், பறை இசையின் மகத்துவத்தையும், அதை வாசிப்பவர்கள் சந்திக்கும் சிறுமையையும் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால், படத்தின் பெரும்பகுதி சாதி பிரச்சினைகளையும் ஆணவக்கொலைகளையும் மையப்படுத்தியதால், பறை இசையின் தனித்தன்மை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
மொத்தத்தில், முக்கியமான சமூகச் செய்தியுடன் வந்த 'மாண்புமிகு பறை', நல்லெண்ணம் கொண்ட முயற்சியாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் நடிப்பு பலவீனங்களால் முழுத் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. பறை இசை ஆர்வலர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
Tags: maanbumigi parai

