லோகா - சாப்டர் 1 சந்திரா - விமர்சனம்
31 Aug 2025
பெங்களூர் நகரத்திற்கு அதீத சக்திகள் படைத்த பெண்ணாக வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். ஒரு பேக்கரியில் பணிபுரியும் அவர், தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே வசிக்கும் இளைஞர்களான நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோரால் ஈர்க்கப்படுகிறார். அதே நேரத்தில், மனிதர்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடும் கொடூர கும்பல் நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்த கும்பலுடன் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சாண்டியுடன் கல்யாணி மோத வேண்டிய சூழல் உருவாகிறது. இதன்மூலம், சந்திரா எனும் கல்யாணி ஒரு சாதாரண பெண் மட்டுமல்ல, அதற்கு மேலான ஒரு மர்மப் புராண சக்தி என்பது வெளிப்படுகிறது. அவர் யார்? அவரது உண்மையான அடையாளம் தெரியவந்த பிறகு என்ன நடக்கிறது? இந்தக் கேள்விகளை நம் புராணக் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் ‘லோகா - சாப்டர் 1 : சந்திரா’ விடையளிக்கிறது.
சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டுகிறார். குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவரது ஆற்றல் பிரமிக்க வைக்கிறது. பேச்சு குறைவாக இருந்தாலும், அவரது உடல் மொழி மற்றும் பார்வையால் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.
நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் சந்திராவால் ஈர்க்கப்படும் இளைஞர்களாக நடித்து, கதையை நகர்த்துவதோடு, தங்கள் உரையாடல்கள் மற்றும் நகைச்சுவையான உடல் மொழியால் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக, நஸ்லனின் காமெடி மற்றும் சந்திராவை பின்தொடரும் காட்சிகள் புன்னகையை வரவழைக்கின்றன.
காவல் ஆய்வாளர் நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் சாண்டி, வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு தீவிரத்தன்மையை சேர்க்கிறது.
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மர்மமான பெரியவர் ஆகியோர், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு உயிரூட்டுகிறது, குறிப்பாக சண்டைக் காட்சிகளில் பரபரப்பை கூட்டுகிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு, காட்சிகளை வண்ணமயமாகவும் பிரமாண்டமாகவும் மாற்றியுள்ளது. கலை இயக்குநர் பங்கலானின் வடிவமைப்பு, யானிக் பென்னின் சண்டைக் காட்சிகள் மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகள் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.
சாமன் சாக்கோவின் படத்தொகுப்பு, ஆரம்பத்தில் சற்று குழப்பமாக இருந்தாலும், சந்திராவின் பின்னணி மற்றும் சூப்பர் ஹீரோ உலகத்தை தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் வெளிப்படுத்துகிறது.
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ வகைமை அரிது. இந்த சவாலை இயக்குநர் டொமினிக் அருண் சிறப்பாக கையாண்டுள்ளார். நம் புராணக் கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக மாற்றி, ஒரு புதிய உலகத்தை உருவாக்கியிருக்கிறார். சந்திராவின் குழந்தைப் பருவம், அவரது சக்திகளின் தோற்றம் மற்றும் பயணம் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் உள்ளன.
முதல் பாதி சந்திராவின் அறிமுகத்தையும் அவரது உண்மையான அடையாளத்தையும் கொண்டாட்டமாக வெளிப்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை சற்று திசைமாறுவது போல் தோன்றுகிறது. சந்திரா பெங்களூருக்கு வருவதற்கான காரணம், அவரது பணி, எதிரிகள் யார் என்பது போன்ற முக்கிய கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை. மாறாக, புதிய சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்துடன் படம் முடிவடைகிறது, இது திரைக்கதையை சற்று தொய்வடையச் செய்கிறது.
‘லோகா - சாப்டர் 1: சந்திரா’ ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகத்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெறுகிறது. கல்யாணி பிரியதர்ஷனின் ஆற்றல்மிக்க நடிப்பு, தொழில்நுட்ப பிரமாண்டம் மற்றும் புராணக் கதையை நவீனப்படுத்திய விதம் ஆகியவை படத்தின் பலம். இருப்பினும், இரண்டாம் பாதியில் கதையின் தெளிவின்மை சற்று ஏமாற்றுகிறது. அடுத்த அத்தியாயங்களுக்கான ஆர்வத்தை தூண்டிவிட்டு, இந்திய சூப்பர் ஹீரோ வகைமையில் ஒரு தைரியமான முயற்சியாக இப்படம் திகழ்கிறது.
நம் புராணக் கதைகளை சூப்பர் ஹீரோ உலகத்துடன் இணைத்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது ‘லோகா’.
