கண்ணப்பா - விமர்சனம்
28 Jun 2025
‘கண்ணப்பா’ திரைப்படம், வேடர் குலத்தில் பிறந்த திண்ணன் என்ற கடவுள் மறுப்பாளர், எப்படி சிவபக்தர் கண்ணப்பராக மாறினார் என்பதை ஆன்மிகத்துடன் கூடிய பிரமாண்டமான கதையாக விவரிக்கிறது. கடவுள் இல்லை, சாமி சிலைகள் வெறும் கற்கள் என்று நம்பிய திண்ணனின் வாழ்க்கை, காதல், திருமணம், மற்றும் அவரது மன மாற்றத்தை, இதுவரை பேசப்படாத கோணங்களில், உணர்வுப்பூர்வமாகவும், பிரமாண்டமாகவும் சொல்கிறது. கண்ணப்பரின் கதையை அறிந்தவர்களுக்கு இது ஒரு திரை விருந்து, அறியாதவர்களுக்கு ஆன்மிகத்தின் ஆழத்தையும், பக்தியின் உணர்வையும் எளிமையாக புரிய வைக்கும் அற்புதமான அனுபவம்.
விஷ்ணு மஞ்சு, திண்ணனாகவும் கண்ணப்பராகவும் இரு வேறு பரிமாணங்களில் மிளிர்கிறார். கடவுளை மறுக்கும் காட்சிகளில் தீவிரமாகவும், பக்தியில் உருகும் காட்சிகளில் உணர்ச்சி பொங்கவும், அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக கண்களாலும், அழகாலும், நடிப்பாலும் கவர்கிறார், புராண கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். மோகன் பாபு, மகாதேவ சாஸ்திரியாக ஆணவத்தையும் கம்பீரத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். மோகன்லால், கிராத்தாவாக தனது திரை இருப்பால் அசத்துகிறார், அவரது வசனங்கள் அறிவுரையாக விளங்குகின்றன. பிரபாஸின் ருத்ரா கதாபாத்திரம், ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கும் வகையில், மெய்சிலிர்க்க வைக்கிறது. அக்ஷய் குமார் (சிவனாக) மற்றும் காஜல் அகர்வால் (பார்வதியாக) பொருத்தமான தேர்வு. சரத்குமார், முதுமையிலும் இளமையாக தோன்றி, அளவான நடிப்பை வழங்குகிறார். சம்பத்ராம், மதுபாலா, முகேஷ் ரிஷி, பிரம்மானந்தம் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.
ஷெல்டன் சாவின் ஒளிப்பதிவு, நியூசிலாந்தின் இயற்கை அழகை ஒரு கதாபாத்திரமாக மாற்றியுள்ளது. பிரமாண்டமான போர்க் காட்சிகளும், உணர்ச்சிகரமான காட்சிகளும், உண்மையா அல்லது வி.எஃப்.எக்ஸ்-ஆ என புரியாதபடி நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. ஸ்டீபன் தேவஸியின் பாடல்கள், இயற்கை அழகுடன் இணைந்து சொர்க்க உணர்வை தருகின்றன, ஆனால் பின்னணி இசை எதிர்பார்த்த அளவு உயரவில்லை. ஆண்டனியின் படத்தொகுப்பு, காதல், யுத்தம், பக்தி ஆகியவற்றை சமநிலையில் கையாண்டு, கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. சண்டை, ஆடை, கலை, வி.எஃப்.எக்ஸ், ஒப்பனை என அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் தரமாக உள்ளன.
விஷ்ணு மஞ்சு எழுதிய கதை மற்றும் திரைக்கதை, கண்ணப்பரின் பக்தியை புதிய கோணத்தில், பிரமாண்டமாக சொல்லியுள்ளது. இயக்குநர் முகேஷ் குமார் சிங், பக்தி படமாக மட்டுமல்லாமல், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், அனைத்து தரப்பினரையும் கவரும் திரை அனுபவமாகவும் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் நீளம் சற்று அதிகமாக உணரப்பட்டாலும், பிரமாண்டமான காட்சிகள், அழகிய இடங்கள், மற்றும் கதாபாத்திரங்களின் ஆழம் இதை மறக்கடிக்கச் செய்கின்றன.
‘கண்ணப்பா’ ஆன்மிகத்தையும், திரைப்பட பிரமாண்டத்தையும் இணைத்து, பக்தியின் ஆழத்தை உணர வைக்கும் ஒரு திரை விருந்து.
Tags: kannappa, vishnu manchu