இந்திரா - விமர்சனம்
21 Aug 2025
தயாரிப்பு - ஜேஎஸ்எம் புரொடக்ஷன், எம்பரர் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் - ஜாபர் சாதிக், இர்பான் மாலிக்
இயக்கம் - சபரிஷ் நந்தா
இசை - அஜ்மல் தசீன்
நடிப்பு - வசந்த் ரவி, சுனில், மெஹ்ரின் பிர்சடா
வெளியான தேதி - 22 ஆகஸ்ட் 2025
நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம்
ரேட்டிங் - 3/5
வசந்த் ரவி மற்றும் மெஹ்ரின் ஆகியோர் கணவன்-மனைவியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்கின்றனர். போலீஸ் அதிகாரியான வசந்த், மது அருந்திவிட்டு பணி வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதால் பணியிடை நீக்கத்தில் உள்ளார். இதனால், விரக்தியில் மூழ்கி, மது பழக்கத்திற்கு மீண்டும் திரும்புகிறார். இதனால், அவரது வாழ்க்கை மேலும் சிக்கலாகிறது. ஒரு கட்டத்தில், அவர் தனது பார்வையை இழக்கிறார். இதனால், மனைவி மெஹ்ரினின் ஆதரவுடன் தனது அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதற்கிடையில், சைக்கோ கொலையாளியாக சுனில் தோன்றுகிறார். தன்னை வெறுப்பேற்றித் தூண்டுபவர்களை கொடூரமாகக் கொலை செய்து, அவர்களின் கைகளை துண்டித்து வீசுகிறார். ஒரு கட்டத்தில் வசந்த் ரவி மனைவி மெஹ்ரின் அதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளை விசாரிக்க, இன்ஸ்பெக்டர் கல்யாண் களமிறங்குகிறார்.
சுனில் காவல்துறையிடம் சிக்கினாரா? இந்தக் கொலைகளுக்கும் வசந்த்-மெஹ்ரின் தம்பதியினருக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு என்ன ? போன்ற கேள்விகளுக்கு மீதி படம் விடையளிக்கிறது.
வசந்த் ரவி ‘இந்திரா’ கதாபாத்திரத்தில் முத்திரை பதிக்கிறார். படத்தின் முதல் காட்சியிலிருந்தே பார்வையாளர்களை கதையோடு இணைத்து, சீட்டின் நுனியில் அமர வைக்கிறார். விரக்தியில் தவிக்கும் காட்சிகளிலும், பார்வை இழந்து மனைவியின் உதவியுடன் இயங்கும் காட்சிகளிலும் அவரது நடிப்பு தனித்து நிற்கிறது.
வில்லனாக சுனில் தனது கதாபாத்திரத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கொடூரமான நடிப்பு பார்வையாளர்களை அதிர வைக்கிறது. மெஹ்ரின் தனது அழகாலும் நடிப்பாலும் கவர்கிறார், குறிப்பாக உணர்ச்சிமிகு காட்சிகளில். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் அனிகாவும் தனது பங்களிப்பால் கவனம் ஈர்க்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் கல்யாண், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அவர்களது கதாபாத்திரங்களில் இயல்பாய் நடித்திருக்கிறார்கள். அனிகா சுரேந்திரன் பிளாஷ்பேக்கில் வந்து அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.
இயக்குநர் சபரிஷ் நந்தா, ஒரு பரபரப்பான கதையை தேர்ந்தெடுத்து, சுவாரஸ்யமான திரைக்கதையால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். ஒவ்வொரு காட்சியும் ‘அடுத்து என்ன ?’ என்ற எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
அஜ்மல் தசீன் பின்னணி இசை படத்தின் பரபரப்பை மேலும் உயர்த்துகிறது. பிரபு ராகவ் ஒளிப்பதிவு படத்திற்கு தனி அழகு சேர்க்கிறது. ஆரம்பக் காட்சிகள் முதல் க்ளைமாக்ஸ் வரை ஒவ்வொரு பிரேமும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வசந்த் ரவியின் அடுக்குமாடி குடியிருப்பை விதவிதமான ஆங்கிள்களில் காட்டியுள்ளார்.
'இந்திரா’ நடிப்பு, தொழில்நுட்பம், மற்றும் கதையின் நகர்வு ஆகியவை இணைந்து பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. த்ரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும் ஒரு படம்.
Tags: indra, vasanth ravi
