ட்ரீம் கேர்ள் - விமர்சனம்

14 Feb 2026

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் என்றாலே பல்வேறு வடிவங்களில் வந்தாலும், கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் அரிது. 'ட்ரீம் கேர்ள்' திரைப்படம், ஒரு இளம் ஜோடியின் காதல் வாழ்க்கையில் ஊடுருவும் ஒரு கனவின் தாக்கத்தை சுவாரஸ்யமாக சித்தரிக்கிறது. புதுமையான திரைக்கதையுடன், இயற்கையான நடிப்பு மற்றும் அழகிய இடங்களைப் பின்னணியாகக் கொண்டு, இது பார்வையாளர்களை ஒரு உணர்வுபூர்வமான பயணத்தில் அழைத்துச் செல்கிறது. இயக்குநர் எம்.ஆர்.பாரதியின் இந்த முயற்சி, நவீன காதல் கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்க்கிறது.

நாயகன் ஜீவா, திரைப்பட இயக்குநராக மாற வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்து வருகிறார். நாயகி ஹரிஷ்மிதா, திரைப்படப் பின்னணி பாடகியாக ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அழகிய காதல் உருவாகிறது. இந்தக் காதல் தம்பதியரின் வாழ்வில் திடீரென ஒரு கனவு நுழைகிறது. அந்தக் கனவு அவர்களது உறவில் என்ன மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை, எந்தவித மசாலா சேர்க்காமல், தூய்மையான காதல் கதையாக விவரிப்பதே 'ட்ரீம் கேர்ள்' படத்தின் சாராம்சம்.

தமிழ்த் திரையுலகில் முக்கோணக் காதல் கதைகள் ஏராளம் வெளியாகி வெற்றி அடைந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான பின்னணிகளுடன், சில புதிய அம்சங்களை உள்ளடக்கியவை. இந்தப் படத்தில், கனவு ஒரு வில்லனாக உருவகப்படுத்தப்பட்டு, அதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை, படத்துக்கு தனித்தன்மை அளித்துள்ளது.

நாயகனாக நடித்த ஜீவா மற்றும் நாயகியாக நடித்த ஹரிஷ்மிதா இருவரும் புதுமுகங்கள். முதல் படத்திலேயே முழு திரைப்படத்தையும் தங்கள் தோள்களில் தாங்கி செல்லும் வாய்ப்பைப் பெற்று, அதைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.

பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா போன்ற பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்து, திரைக்கதையின் ஓட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளனர்.

இளமாறன் இசையமைப்பில் படத்தில் உள்ள ஒரு பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதையின் சூழலுக்கு ஏற்ப, எந்தவித சத்தமும் இன்றி அமைதியாகவும், இதமாகவும் பயணிக்கிறது.

ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ், கட்டிடங்கள் இல்லாத ஊட்டியின் இயற்கை அழகைப் படம் பிடித்து, கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.

அழுத்தமான காதல் கதையாக இருந்தாலும், பார்வையாளர்களின் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை அழகாகத் தொகுத்துள்ளார்.

ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன் ஆகியோரின் வசனங்களில் காதல் சுவை சற்று குறைவாகவே உள்ளது.

எம்.டி.தமிழரசன், கிருத்திகா தாஸ் ஆகியோரின் திரைக்கதை, முக்கோணக் காதல் கதையை ஒரு புதிய வடிவத்தில் அளிக்க முயன்று, அதில் வெற்றி கண்டுள்ளது.

கதை எழுதி இயக்கிய எம்.ஆர்.பாரதி, கனவுகளைத் துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு நுழைந்து உருவாக்கும் மாய உலகம் என்ற ஒற்றை வரி கதையை வைத்து, அழகிய மற்றும் உணர்வுமிக்க காதல் படைப்பை உருவாக்கியுள்ளார்.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட காட்சிகள், பார்வையாளர்களையும் அங்கு சுற்றித் திரிய வைப்பது போல் உள்ளது. மேலும், காதலர்கள் மட்டுமே செல்லும் இடங்கள் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ஈர்க்கின்றன.

முக்கோணக் காதல் கதைகள் பல இருந்தாலும், அதில் ஒரு வித்தியாசத்தைச் சேர்த்து, அதீத மசாலா இல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி, இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப காட்சிகளை கையாள்வதில் சற்று தயக்கம் காட்டியுள்ளார். அந்தத் தயக்கத்தை சரி செய்திருந்தால், இந்த காதல் படம் நிச்சயம் ஒரு உன்னதமான படைப்பாக மாறியிருக்கும்.

Tags: dream girl, mr bharathi

Share via: