கபுள் பிரண்ட்லி - விமர்சனம்

14 Feb 2026

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் பல வடிவங்களில் வந்தாலும், நகர வாழ்க்கையின் சவால்களையும், இளம் ஜோடிகளின் கனவுகளையும் இணைத்து சொல்லும் படங்கள் எப்போதும் ரசிகர்களை ஈர்க்கும். 'கபுள் பிரண்ட்லி' திரைப்படம், சென்னை போன்ற பெருநகரத்தில் கனவுகளைத் துரத்தும் இளைஞர்களின் வாழ்க்கையை அழகாக சித்தரிக்கிறது. 

இயக்குநர் அஸ்வின் சந்திரசேகரின் இந்த முயற்சி, காதலின் உண்மைத்தன்மையையும், துணையின் ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி, பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதில் இயல்பான நடிப்பு, இனிமையான இசை மற்றும் ரசனையான காட்சிகள் இணைந்து, ஒரு முழுமையான காதல் அனுபவத்தைத் தருகின்றன.

வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உட்புற அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னைக்கு வரும் நாயகன் சந்தோஷ் சோபன், அந்தத் துறையில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் போராடுகிறார். வறுமையை எதிர்கொள்ள பகுதி நேரமாக இரு சக்கர வாடகை வாகனம் ஓட்டுகிறார். நாயகி மானசா வாரணாசி, ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன், சென்னையில் வேலை தேடி திரிகிறார். இந்த இருவரும் சூழ்நிலை வசத்தால் சந்தித்து, ஒரு கடினமான சூழலால் ஒரே வீட்டில் தங்கி, இணைந்து வாழ்க்கையை நடத்துகின்றனர்.

நாயகியின் வருகையால் நாயகனின் கனவு நனவாகிறது. அவர் எதிர்பார்த்தபடி தனது துறையில் வெற்றியை நோக்கி முன்னேற, நாயகியும் தான் விரும்பிய ஐடி துறையில் வேலை பெறுகிறார். இவ்வாறு இருவரும் தங்கள் கனவு வாழ்வை மகிழ்ச்சியுடனும், காதலுடனும் தொடரும் போது, அவர்களது பயணத்தில் திடீர் இடையூறு ஏற்படுகிறது. அந்த இடையூறு என்ன? அதனால் பாதிக்கப்பட்ட அவர்களது சந்தோஷப் பயணம் மீண்டும் தொடர்ந்ததா? என்பதை அற்புதமான காதல் உணர்ச்சியுடன் விவரிப்பதே 'கபுள் பிரண்ட்லி'.

தொடக்கம் முதல் இறுதி வரை மிக இயல்பாக நகர்ந்து, பார்வையாளர்களைத் திரையுடன் இணைத்து, சிறந்த காதல் உணர்வையும், நம்பிக்கையையும் தரும் இந்தப் படம், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த காதல் திரைப்படங்களின் பட்டியலில் நிச்சயம் இணையும்.

நாயகனாக நடித்த சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதுமுகமாக இருந்தாலும், தனது நடிப்பால் அந்த அடையாளத்தை மறைத்து, ரசிகர்கள் இதயத்தில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார். வறுமையில் சிக்கித் தவிக்கும் காட்சிகளிலும் சரி, துணையின் உதவியால் தனது துறையில் சாதிக்கும் போதும் சரி, அவரது இயல்பான நடிப்பு கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்துள்ளது.

நாயகியாக நடித்த மானசா வாரணாசி, தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார் என்று கூறினால் அது பொருத்தமானது. முதல் பகுதி முழுவதும் தனது அழகாலும், நடிப்பாலும் ஈர்க்கும் அவர், இரண்டாம் பகுதியில் உள்ளத்தை கனக்கச் செய்து, கண்களை ஈரமாக்கி விடுகிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான நகைச்சுவை வசனங்கள் அசத்தி சிரிக்க வைக்கின்றன. சுனில் ரெட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக பயணித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன், யதார்த்தத்தை மீறாத காட்சிகளால் கவனம் ஈர்ப்பதோடு, நாயகன்-நாயகி காதல் மற்றும் இணைந்த காட்சிகளை ரசனையுடன் படம்பிடித்து அசத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் அனைத்து பாடல்களும் படத்தின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் மிகச் சிறப்பு.

கணேஷ் சிவாவின் எடிட்டிங் படத்துக்கு பெரும் வலிமை. கலை இயக்குநர் மைக்கேலின் பணியும் ஈர்க்கிறது.

எழுதி இயக்கிய அஸ்வின் சந்திரசேகர், காதல் உணர்வுகளை இதயத்துக்கு அருகில் காட்டியிருப்பதோடு, துணையாக இருப்பவருக்கு ஆதரவு அளித்து ஊக்குவிப்பது, காதலர்களாகவோ தம்பதியராகவோ இருந்தாலும் அவர்களது முக்கிய கடமை என்பதை நினைவூட்டியுள்ளார்.

காதல் கதையாக இருந்தாலும், முன்னேறத் துடிக்கும் பெண்களின் போராட்டங்களைப் பேசும் இந்தப் படம், அவற்றை கடந்து தொடர்ந்து உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

காலம் மாறியதால் காதலும் மாறிவிட்டதா? என்று விவாதிப்பவர்களிடையே, உண்மையான காதல் என்றும் மாறாது என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் வகையில் படத்தின் முடிவை அமைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர், அதை அனைத்து தரப்பினரும் ஏற்று, படத்தை பாராட்ட வைத்துள்ளார்.

Tags: couple friendly

Share via: