தெய்வ மச்சான் - விமர்சனம்

22 Apr 2023

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், விமல், பாண்டியராஜன், பால சரவணன், அனிதா சம்பத் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

கிராமத்துக் கதைகளில் நடிப்பதற்கு தற்போதுள்ள நடிகர்களில் பொருத்தமான ஒரு நடிகர் விமல். அவர் அறிமுகமான ‘களவாணி’ படத்திலிருந்து அவர் நடித்துள்ள கிராமத்துப் படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கூட சுவாரசியமான படங்களாக அமையும். இந்தப் படமும் ஒரு சுவாரசியமான படம்தான். ஒரு சிம்பிளான கதையை வைத்துக் கொண்டு கலகலப்பாகப் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

அப்பா, அண்ணன், தங்கை என கிராமத்தில் வாழும் எளிமையான குடும்பம் விமல் குடும்பம். அவருடைய தங்கை அனிதா சம்பத்திற்கு சரியான மாப்பிள்ளை அமையாமல் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு மாப்பிள்ளை அமைந்து திருமணமும் நடக்கிறது. திருமணத்திற்கு முன்தின இரவில் விமலுடைய கனவில் வழக்கமாக வரும் ஒரு சாட்டைக்காரன் கனவில் வந்து தங்கை கணவரின் மச்சான் இறந்து போவார் எனச் சொல்கிறார்கள். சிறு வயதிலிருந்தே அந்த சாட்டைக்காரன் சொல்வது நடப்பதால் விமல் பயப்படுகிறார். தான்தான் அந்த மச்சான் என்பதால் அவருடைய பயம் இன்னும் அதிகமாகிறது. இதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்துக் கதை, கதாபாத்திரம் என்றால் விமல் நடிக்கவே தேவையில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். இந்தப் படத்திலும் அப்படியேதான். இடைவேளைக்குப் பின் அவருடைய கதாபாத்திரம் முற்றிலும் காமெடி கதாபாத்திரமாக மாறிவிடுகிறது. அதுவும் அவருக்கு இயல்பாகவே வருகிறது.

விமலின் தங்கையான அனிதா சம்பத், அப்பாவாக பாண்டியராஜன், அத்தையாக தீபா சங்கர், நண்பனாக பாலசரவணன், தங்கையின் கணவராக வத்சன் வீரமணி உள்ளிட்ட அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 

முதல் பாதியில் கதையில் சுவாரசியம் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், இரண்டாவது பாதியில் அதற்கும் சேர்த்து கலகலப்பூட்டி இருக்கிறார் இயக்குனர். 

பெரிய பட்ஜெட் இல்லாமல் எடுக்கப்படும் இம்மாதிரியான எளிமையான படங்களும்தான் தமிழ் சினிமாவை வாழ வைக்கும். இது போன்று இன்னும் நிறைய படங்கள் வருவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான ஒன்று.

Tags: deiva machan, vimal, martin nirmal kumar, anitha sampath, bala saravanan

Share via: