சிட்டி ஆப் டிரீம்ஸ் - விமர்சனம்
16 Mar 2025
உலகின் மிகவும் வளமான நாடு, புதுமைகளின் தாயகம், வசதியான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பான சூழல் என்று பலரும் நம்பும் அமெரிக்காவின் உயர்ந்த பிம்பத்தை உடைத்தெறியும் விதமாக, அங்கும் ஏழ்மை, குழந்தை தொழிலாளர்களின் கொடுமை, மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகமாக உள்ளன என்பதை தைரியமாக வெளிப்படுத்துகிறது ‘சிட்டி ஆப் டிரீம்ஸ்’ படம்.
இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள், என்று பிரபல இயக்குனர்களும் சரி டாக்குமெண்ட்ரி எடுப்பவர்களும் சரி உலக நாடுகளுக்கு அதை தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.
அதே சமயம் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை பார்க்கும்பொழுது ஏதோ சொர்க பூமி போல் காட்டி உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். ஆனால் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை *சிட்டி ஆப் ட்ரீம்ஸ் என்ற ஆங்கிலப்படம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.
வெவ்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை கொத்தடிமைகளாக அடக்கி வைத்து அவர்களை தையல் கூலிகளாக பயன்படுத்திகின்றனர் . பன்னிரண்டு மணி நேர வேலை ,அடி ,சவுக்கடி பிரம்படி என்று பல்வேறு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதுடன் அவர்களை வைத்து பாலியல் படங்கள் தயாரிப்பது மற்றும் பல்வேரு சட்ட விரோதங்கள் செயல்கள் நடைபெறுவதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் படம் வெளிப்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவை ஒட்டியுள்ள பகுதிகளில் அகதிகளாக வாழும் ஒரு சிறுவனான ஆரி லோபஸ், கால்பந்து வீரர் என்ற கனவுடன் அமெரிக்காவின் ஒரு நகரத்திற்கு வருகிறார். ஆனால், அவரது கனவுகள் நிறைவேறுவதற்கு பதிலாக, ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலை செய்யும் சூழலில் சிக்கிக் கொள்கிறார். அவரைப் போலவே பல சிறுவர்களும் அந்த இடத்தில் கடினமான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கொடுமையான சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஆரி லோபஸின் வாழ்க்கையையும், அவரது போராட்டங்களையும் இந்த படம் மிகவும் எதார்த்தமாகவும், அதே நேரத்தில் சினிமா மொழியின் மூலம் விறுவிறுப்பாகவும் சித்தரிக்கிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஆரி லோபஸ், வசனங்கள் எதுவும் பேசாமல் தனது கண்கள் மூலம் பல உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். கால்பந்தாட்டத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒரு காகிதத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆரி லோபஸ், தப்பிக்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் பார்வையாளர்களை பதற்றமடைய செய்கிறார்.
அமெரிக்கா என்றால் ஆடம்பரம் மற்றும் அழகு மட்டுமல்ல, அங்கே ஏழ்மை, லஞ்சம் மற்றும் குற்றங்களும் நிறைந்துள்ளன என்பதை இந்த படம் தைரியமாக வெளிப்படுத்துகிறது. இயக்குநர், திரைக்கதை மற்றும் காட்சிகளை மிகவும் எதார்த்தமாக வடிவமைத்து, மொழி தெரியாதவர்களையும் படத்துடன் இணைக்கும் விதமாக படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் அமெரிக்காவின் கருப்பு பக்கங்களை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கர், அதை திரை மொழியின் மூலம் சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான திரைப்படமாகவும் தயாரித்திருக்கிறார். இந்த படம் பார்வையாளர்களை கதாபாத்திரத்துடன் ஒன்றிணைத்து, அவர்களின் உணர்ச்சிகளை அசைக்கும் விதமாக உள்ளது.
Tags: city of dreams