அஸ்திரம் - விமர்சனம்

21 Mar 2025

"அஸ்திரம்"  ஒரு விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படம். 

தொடர் தற்கொலைகளின் மர்மத்தை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஷாம், சுமந்த் என்ற காவலரின் உதவியோடு வழக்கைத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், ஷாமின் கல்லூரி நண்பர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டு, ஷாம் கட்டாய விடுமுறைக்கு அனுப்பப்படுகிறார். பணியில் இல்லாத நிலையிலும், தொடர் தற்கொலைகளுக்கும் தன்னைச் சுற்றியுள்ள தடயங்களுக்கும் தொடர்பு இருப்பதை உணரும் ஷாம், அதன் பின்னணியை கண்டறிய முயல்கிறார். இந்த பயணத்தில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்படுகின்றன.

காக்கி சீருடை அணியாத காவல்துறை அதிகாரியாக ஷாம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், குழந்தை இல்லாத தனது மனைவிக்கு ஆறுதல் சொல்லி தனியாக நின்று வருந்தும் காட்சியில் மிகுந்த பாராட்டைப் பெறுகிறார். கதாநாயகியாக நடித்த நிரா, ஷாமின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இழப்புகளை ரசிகர்களுக்கு கடத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சுமந்த் என்ற காவலர் கதாபாத்திரத்தில் நடித்த புதுமுக நடிகர், திரைக்கதையின் மையப்புள்ளியை மிக நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மனநல மருத்துவராக நடித்த நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்த அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் போன்றோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், தற்கொலை தொடர்பான விசாரணையின் படபடப்பை ரசிகர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். படத்தொகுப்பாளர் பூபதி ஜப்பான் மன்னனின் கதையை மட்டும் திரும்ப திரும்ப சொல்வதை தவிர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். 

அரவிந்த் ராஜகோபால் எழுதி இயக்கிய இந்த படம், நாயகனை மட்டுமே பிரதானப்படுத்தாமல் வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது. வில்லனே நாயகனுக்கு துப்பு கொடுப்பது, அதற்கான காரணமாக சொல்லப்படும் பிளாஷ்பேக் மற்றும் திருப்பங்கள் யூகிக்க முடியாதவாறு அமைந்துள்ளன. படத்தின் இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், "அஸ்திரம்" படம் ரசிகர்களை தாக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜப்பான் மன்னனின் கதையை பல கதாபாத்திரங்கள் திரும்ப திரும்ப சொல்வது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், அதை தவிர்த்து பார்த்தால் படம் முழுவதும் சீட் நுணியில் உட்கார வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: asthiram, shaam

Share via: