சாக்கோபார் - விமர்சனம்
29 Aug 2016
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய படம். ஆனால், அந்தக் குறை எதுவும் தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கு படத்தை விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கிறார்.
ஒரே ஒரு பெரிய பங்களாவில் நடக்கும் கதைதான் என்றாலும் அது பற்றிய எண்ணம் வராமல் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அதற்குக் காரணம் படத்தின் நாயகியான தேஜஸ்வினி.
பெற்றோர்கள் வெளியூருக்குச் சென்றிருக்க அவ்வளவு பெரிய வீட்டில் தனியாகத் தங்கியிருக்கிறார் தேஜஸ்வினி. துணைக்கு அவ்வப்போது காதலன் நவ்தீப்பை அழைத்துக் கொள்கிறார். அவர் வருகிறார், போகிறார். ஆனால், தேஜஸ்வினி மட்டும் அந்த வீட்டில் தனியாக உறங்க முடியாமல் தவிக்கிறார். அந்த வீட்டிற்குள் இருக்கும் பேய் ஒன்று அவரை உறங்க விடாமல் செய்கிறது. அது என்ன ? என்பதுதான் படத்தின் பரபரப்பான கதை.
படத்தில் தேஜஸ்வினி நடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ராம்கோபால் வர்மா எப்படியெல்லாம் அவரைக் காட்ட வேண்டும் என்று நினைத்தாரோ அதற்குத் தக்கபடி ஒளிப்பதிவாளரின் வித்தியாசமான கோணங்களில் தன் தேகத்தை சரியாகக் காட்டியிருக்கிறார் தேஜஸ்வினி.
அவருடைய கிளாமர்தான் படத்தை அநியாயத்திற்குத் தாங்கிப் பிடிக்கிறது. அடிக்கடி அவர் குளிப்பதன் மர்மம் என்ன என்பதுதான் புரியவில்லை.
நவ்தீப் வருகிறார், நாயகியுடன் காதலில் ஈடுபடுகிறார், பின்னர் ஓடி விடுகிறார். அவரை முழுவதுமாகத் தங்க வைத்தால் வேறு படமாக ஆகிவிடுமோ என இயக்குனர் பயந்திருக்கலாம்.
எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம், பல கோடி செலவு செய்து கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் மிரட்டுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அப்படியெல்லாம் இல்லாமல் ஒரு அழகான நாயகி, கொஞ்சம் ஆபத்தான காட்சிகள் என படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
Tags: chacobar