54321 - விமர்சனம்
29 Aug 2016
பேய்ப் படங்களைத்தான் ஒரு வீட்டுக்குள்ளேயே எடுத்து முடித்து விடுவார்கள் என்று பார்த்தால் ஒரு த்ரில்லர் படத்தையும் வீட்டுக்குள்யே எடுத்து முடித்துள்ளார்கள்.
ஆர்வின், பவித்ரா இருவரும் காதல் கணவன் மனைவி. இவர்களது வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த ஷபீர், ஆர்வினை ஒரு குழந்தையைக் கொலை செய்யச் சொல்கிறார். ஆர்வினின் அம்மாவை சிறு வயதிலேயே கார் முன் தள்ளி கொலை செய்தவர்தான் ஷபீர்.
ஆர்வினை ஷபீர் குடும்பத்தினர் எடுத்து வளர்க்க அது பிடிக்காத ஷபீர் அம்மாவையே கொலை செய்து விடுகிறார். சிறை தண்டனை முடிந்து பல வருடங்கள் கழித்து ஆர்வினைப் பழி வாங்க வருகிறார். அவருக்கு தன்னைப் போலவே ஆர்வினும் கெட்டவன் எனப் பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் வெறியாக உள்ளது.
ஷபீரிடம் சிக்கிய ஆர்வின், பவித்ரா இருவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தில் ஷபீருக்குத்தான் அதிக வசனங்கள் உள்ளன. அவர்தான் பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் பேசுவதைத்தான் மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்வின் எப்படியாவது ஷபீர் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். அதனால் படம் முழுவதுமே பதட்டத்துடன் இருப்பது மட்டுமே அவருடைய வேலை.
பவித்ரா தன்னுடைய இரண்டு விரல் வெட்டப்பட்ட பிறகும் ஏதோ நகத்தை வெட்டியது போலவே அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். இவருடைய வசனங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலே அதிகம்.
ரவி ராகவேந்தர், ஜெயக்குமார் ஆகியோரும் படத்தில் உண்டு. அந்த வீட்டிற்குத் திருட வரும் ஜெயக்குமார்தான் படத்திற்கே கொஞ்சம் ‘ரிலீஃப்’ கொடுக்கிறார்.
ஒரு வீட்டுக்குள் அதிக செலவில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமான இந்த முயற்சிக்காவது இயக்குனர் ராகவேந்திர பிரசாத்தைப் பாராட்டலாம்.
Tags: 54321