வென்று வருவான் - விமர்சனம்

29 Aug 2016
குறைந்த பட்ஜெட்டில் முடிந்த வரை நிறைவாக எடுக்கப்பட்டுள்ள படம் என ‘வென்று வருவான்’ படத்தைத் தாராளமாகக் குறிப்பிடலாம். இம்மாதிரியான படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைத்து, தயாரிப்பாளரும் நன்றாக விளம்பரப்படுத்தினால்தான் மக்களிடம் போய்ச் சேரும். கண் பார்வை இல்லாத அம்மாவால் வளர்க்கப்பட்ட நாயகன் வீரபாரதி ஊரில் உள்ளவர்களால் முரடன் என்று சொல்லப்படுபவன். ஆனால், பெண்களை யார் கிண்டல் செய்தாலும் அவர்களை அடித்து உதைக்கும் நல்ல குணம் கொண்டவன். 8 கொலைகள் செய்ததாகக் கூறி அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். தூக்கு தண்டனையும் அவனுக்கு நிறைவேற்றப்பட இருக்கும் சூழ்நிலையில் ஒரு எதிர்பாராத திருப்பம் நடக்கிறது அது என்ன என்பதுதான் படத்தின் கதை. நாயகனாக நடித்துள்ள வீரபாரதி கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஊராருக்கு கெட்டவன், உள்ளுக்குள் நல்லவன் என்ற கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முயன்றால் தமிழில் நல்ல நடிகராகப் பெயர் பெறலாம். படத்தில் நாயகியை விட அம்மாவாக நடித்திருக்கும் எலிசெபத்துக்கு காட்சிகள் அதிகம். தாய், மகன் பாசம் பற்றிய கதை என்தால் அப்படி அமைத்திருக்கிறார்கள். கண் பார்வை இல்லாத அம்மாவாக, கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் அனைவரையும் கண் கலங்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வையாபுரி, கிரேன் மனோகர் கதாபாத்திரம் படத்திற்குத் தேவையில்லாத ஒன்று. புதியவர்களின் முயற்சியைப் பாராட்டலாம்.

Tags: vendru varuvaan

Share via:

Movies Released On March 15