பிரேக் பாஸ்ட் - விமர்சனம்

24 Apr 2026

தற்போதைய இளைஞர்களின் வேகமான வாழ்க்கை முறையில், காதல் எப்படி ஒரு கணத்தில் உருவாகி அடுத்த கணத்தில் மறைந்துவிடுகிறது என்பதை உணர்ச்சிகரமாக படமாக்கியுள்ளது ‘பிரேக்பாஸ்ட்’.

சமூக ஊடகங்கள் நிறைந்த இந்த யுகத்தில், அவசர அவசரமாக காதலில் விழுந்து, அதே வேகத்தில் பிரிவை நோக்கி பயணிக்கும் இளம் தம்பதிகளின் மனநிலையை ஆழமாக தொட்டுச் செல்லும் படம் இது.

கதையின் நாயகி ரோஸ்மின், பெரிய தொழிலதிபரின் மகள். வேலை இல்லாமல் தவிக்கும் கிராமத்து இளைஞன் ராணவுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அளிக்கிறாள். நட்பு காதலாக மாறுகிறது. ஆனால் ரோஸ்மினின் தந்தை இந்த உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் மறுப்பை புறந்தள்ளி ராணவை திருமணம் செய்துகொண்ட ரோஸ்மின், தன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் அவருக்கு ஒப்படைத்து, சுகமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறாள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு காதலர்களாக இருந்தபோது இருந்த அந்த அன்பும் மகிழ்ச்சியும் மறைந்து, பதிலுக்கு மோதல்களும் வெறுப்பும் அதிகரிக்கின்றன. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? காதலித்த வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் பிரிவைத் தேர்ந்தெடுத்த இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா அல்லது பிரிந்தே போனார்களா என்பதுதான் படத்தின் மையக்கதை.

பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படத்தை விட இந்தப் படத்தில் மிகுந்த நேர்த்தியுடன் நடித்திருக்கிறார். குடும்பத்துக்காக உழைக்கும் இளைஞன், பெற்றோரை சரியாக கவனிக்க முடியாமல் வருந்தும் மகன், மனைவியின் பணப் பெருமையால் பாதிக்கப்படும் கணவன் என பல்வேறு உணர்ச்சி நிலைகளை தன் நடிப்பில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

அறிமுக நடிகை ரோஸ்மின் முதல் படத்திலேயே வலிமையான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார். பணக்காரப் பெண்களின் அதிரடி செயல்பாடுகளையும், பிறரை மதிக்காத போக்கையும் தன் ஒவ்வொரு அசைவிலும் சரியாக கொண்டு வந்துள்ளார். “மனைவி என்றால் எப்போதும் இப்படித்தான்” என்பதை உணர வைக்கும் வகையில் ஆண்களுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிரித்திக் மோகன் - அமிதா ரங்கநாத் ஜோடி, தங்கள் வயதுக்கு ஏற்ற துள்ளலான மற்றும் மோதல் நிறைந்த நடிப்பால் திரைக்கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளனர். நாயகியின் தந்தையாக சம்பத் ராஜ், மருத்துவராக கஸ்தூரி, ராணவின் தாயாக அர்ச்சனா ஆகியோரின் அனுபவம் நிறைந்த நடிப்பு படத்துக்கு பெரும் பலம் அளித்துள்ளது.

எம்.வி. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல் ஆகவும், பார்வைக்கு இதமாகவும் அமைந்துள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இம்முறை பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவரது வழக்கமான திறன் வெளிப்படவில்லை.

எஸ். பாஸ்கர் மற்றும் சுஜித் இருவரின் படத்தொகுப்பு கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு சரியாகக் கடத்தியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா, சமூக ஊடக யுகத்தில் இளைஞர்கள் ஏன் ஒரே நாளில் காதலித்து அடுத்த நாளே பிரிகிறார்கள் என்பதற்கு உணர்வுபூர்வமான பதிலைத் தர முயன்றுள்ளார். ஆனால் பிரிவுக்கான காரணத்தை பழைய காலத்து அதே பாரம்பரியமான விஷயங்களிலேயே தேடியிருக்கிறார்.

தற்போதைய காதல் மற்றும் இளைஞர் உறவுகளை ஆழமாக ஆராயாமல், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அதன் விளைவான பிரிவை அதிகம் பேசியிருப்பது திரைக்கதையின் வேகத்தையும், காதல் பகுதியின் சுவாரஸ்யத்தையும் சற்று குறைத்துவிட்டது. எனினும், காதலர்களுக்கும் தம்பதிகளுக்கும் அறிவுரை வழங்கும் வகையில் அமைந்த சில காட்சிகளும் வசனங்களும் நிச்சயம் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும்.

Tags: breakfast

Share via: