படவா - விமர்சனம்
08 Mar 2025
விமல், வெட்டியாக ஊர் சுற்றி, தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து கிடைக்கும் பொருட்களை திருடி விற்பதும், ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பதுமாக வாழ்க்கை நடத்துகிறார். அவரது இந்த நடவடிக்கைகள் கிராம மக்களுக்கு பெரும் பாரமாக இருக்க, அவரை நாடு கடத்த முடிவு செய்கிறார்கள். பணம் வசூலித்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமலின் வேலை பறிபோக, மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்புகிறார். இந்த முறை, அவரை பயந்து ஓடிய ஊர் மக்கள், மாலை மரியாதையுடன் வரவேற்று, அவரை ஊர் தலைவராக தெரிவு செய்கிறார்கள்.
இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? மக்களின் மாற்றம் விமலின் வாழ்க்கையில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்துகிறது? என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘படவா’ படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.
வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்த்து நிற்பது என்று விமல் தொடர்ந்து செய்து வரும் கதாபாத்திரங்களை இந்த படத்திலும் தொடர்கிறார். அவரது அப்பாவித்தனமான முகபாவங்களும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது. விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, அவருடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து, படம் முழுவதும் நகைச்சுவையை பொழிகிறார். நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஷ்ரிதா ராவ், வேலை இல்லாத நாயகி வேடத்தில் தனது பாத்திரத்தை நன்றாக நிறைவேற்றியிருக்கிறார்.
விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் போன்றவர்கள் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ப அளவாக நடித்திருக்கிறார்கள். ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து, படத்திற்கு உயிர் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகள் கலர்புல்லாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா, வழக்கமான மற்றும் அதர்பழைய கதையை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவும், கமர்ஷியலாகவும் இயக்கியிருந்தாலும், தேவையில்லாத சில காட்சிகள் மூலம் படத்தின் நீளத்தை அதிகரித்து, சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்திருக்கிறார். விமல் மற்றும் சூரியின் அலப்பறைகள் மூலம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்லும் இயக்குநர், விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்களது சுயநலத்திற்காக வளர்ப்பதை பற்றி மேலோட்டமாக பேசியிருந்தாலும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெறுகிறார்.
‘படவா’ படம், விமலின் வழக்கமான கமர்ஷியல் பாணியில் அமைந்த ஒரு பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கிறது. நகைச்சுவை, காதல், அதிரடி, சமூகப் பிரச்சினை என பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த படம், பார்வையாளர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கிறது.
விமல் மற்றும் சூரியின் ஜோடி நடிப்பு, பாடல்கள், ஒளிப்பதிவு, இசை அனைத்தும் சேர்ந்து படத்தை முழுமையாக்கியிருக்கின்றன. இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படமாக அமைந்துள்ளது.
Tags: badava, vimal, soori