கிங்ஸ்டன் - விமர்சனம்

07 Mar 2025

கிங்ஸ்டன் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தூவத்தூர் மீனவ கிராமத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஃபேண்டஸி திகில் திரைப்படமாகும். 

கிராமத்தினர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தாலும், கடலுக்குள் செல்வதை தவிர்க்கின்றனர். காரணம், 1982இல் மரணமடைந்த ஒருவரின் ஆத்மா கடலை ஆட்கொண்டு அங்கு செல்லும் எல்லோரையும் மாயமாக்குவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இதன் விளைவாக 40 வருடங்களாக ஊரே ஒரு அனாதை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வாழ்க்கையை வாழ முடியாமல் இருக்கும் இளைஞர்கள் சிலர் கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவராக இருக்கும் கதாநாயகன் தனது வாழ்வாதாரத்திற்காக கடத்தல் தொழிலில் இறங்கினாலும், பின்னர் உண்மையைக் கண்டறிந்து அதிலிருந்து விலகி, கிராம மக்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியும் என ஒரு தீர்வை தேடும் முயற்சியில் இறங்குகிறார்.  

கதையின் மையக் கருவாக கடலில் நடக்கும் மர்மங்கள் அமைந்துள்ளன. நாயகன் தனது நண்பர்களுடன் கடலுக்குள் சென்று அந்த மர்மங்களை நீக்க முயல்கிறான். ஆனால், அவர் உயிருடன் திரும்புவாரா, அல்லது ஊர் மக்கள் நம்பும் போல பிணமாக கரை ஒதுங்குவாரா என்பதே கதை. கதையின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாக தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் கடல், மழை, புயல் என மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாக நகர்கிறது. இயக்குநர் கமல் பிரகாஷ் தனது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகளை படமாக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் பலம் குறைவாக இருப்பதால், அந்த யோசனைகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  

நாயகனாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தனது வழக்கமான நடிப்பு பாணியில் தான் நடித்துள்ளார். கதாநாயகி திவ்ய பாரதிக்கு பெரிதாக செய்யும் வேலை இல்லை என்றாலும், அவருக்காக சில காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லன் கதாபாத்திரமாக நடித்த சாபுமோன் அப்துசாமத் மற்றும் மற்ற நடிகர்கள் தங்களுக்கான இடங்களை சரியாக பயன்படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய் கடலின் அழகு, ஆபத்து, மர்மம் ஆகியவற்றை திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் கிராபிக்ஸ் மீதான அதிகமான சார்பு காரணமாக அவை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சொந்த படத்தில், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுததி இருக்கலாம். பாடல்கள் அதிகம் கோர்வையாக அமையவில்லை, மேலும் பின்னணி இசை சற்றே அதிகமாக சத்தமாக இருப்பதால், காட்சிகளின் தாக்கம் குறைந்து விடுகிறது. படத்தொகுப்பில் ஒருவிதமான குழப்பம் காணப்படுகிறது. திகிலா அல்லது திருப்பங்களா என்பதை சொல்ல முடியாத சூழலில், கதையின் பல முக்கிய அம்சங்கள் எதிர்பார்த்த போதை தரவில்லை.  

கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவை படக்குழுவின் உழைப்பை வெளிப்படுத்தினாலும், அவற்றின் தரம் உயர்ந்ததாக இல்லை. கதையில் அடக்கப்பட்டுள்ள 40 ஆண்டுகளாக கடலில் நடக்கும் மர்மம், தங்கத்தின் மீதான பேராசை, கடலில் அமானுஷ்யம் ஆகியவை முதல் பாதியில் சிறப்பாக சொல்லப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாதியில் அது தடுமாறி செல்கிறது.  

மொத்தத்தில், கிங்ஸ்டன் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. கடல் மையமாக ஒரு திகில் படத்தை உருவாக்கும் ஐடியா சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் இருக்கும் பலவீனங்கள் காரணமாக முழுமையான திருப்தியை கொடுக்க முடியாமல் போயிருக்கிறது. விஎப்எக்ஸ், பின்னணி இசை, கதையசைவில் இருக்கும் பல இடையூறுகள் படத்தின் மொத்த அனுபவத்தை பாதிக்கின்றன. இருந்தாலும், கடல், திகில், பேய்கள், மர்மங்கள் ஆகியவை கலந்த புதிய முயற்சிகளை ஆதரிக்க விரும்புவோர் இப்படத்தை ஒரு முறை பார்ப்பதை பரிசீலிக்கலாம்.

Tags: kingston, gv prakashkumar, divyabarathi, kamal prakash

Share via: