பூங்கொத்து வேண்டாம், புத்தகம் போதும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

14 May 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்திற்குப் பதிலாக புத்தகங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கொரோனா என்ற பெருந்தொற்று நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் கட்டமைப்புகளின் மூலமாக நோய்த் தொற்றிலிருந்து மீளவும், முழு ஊரடங்கு காரணமாகத் தொற்று பரவாமல் தடுக்கவும் அரசு களப்பணி ஆற்றி வருகிறது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கருணை உள்ளத்துடன் முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பலரும் நிதி உதவியை வழங்கி வருகிறார்கள். இதன் பொருட்டு என்னைச் சந்திக்கவும், வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் வருபவர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாகவே இவற்றைத் தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன் என்பதை அனைவரும் அறிவீர்கள். எனவே, பூங்கொத்துகள், பொன்னாடைகளை உறுதியாகத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அமைச்சர்களை, சட்டப்பேரவை உறுப்பினர்களை அவரவர் மாவட்டங்களுக்கும் சொந்தத் தொகுதிகளுக்கும் சென்று கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடக் கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு சென்றுள்ள அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்புகள் தரப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன.

தொற்றுக் காலத்தில் இதுபோன்ற வரவேற்பை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். வரவேற்பு வளைவுகள், பதாகைகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளை மீறுபவர்களை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களே கண்டிக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பில் மட்டுமே முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் நமது செயல்களின் மூலமாக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடிப்போம். நின்று நிலைபெறும் சாதனைகளின் மூலமாக மக்களை அன்பைப் பெறுவோம்", எனத் தெரிவித்துள்ளார்.

Tags: tamilnadu, mk stalin

Share via:

Movies Released On March 15